Published : 10 Oct 2022 02:19 PM
Last Updated : 10 Oct 2022 02:19 PM
சென்னை: “அரசியல் எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள்” என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்காக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஜனநாயகப் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது தேர்தல் பல்வேறு நிலைகளில் நிறைவுற்று, கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் கழகத்தின் இதயமாம் பொதுக்குழு நேற்று (9-ம் தேதி ) மிகச் சிறப்பான முறையிலே கூடி, ஒரு மனதாகத் தேர்வு செய்து, ஜனநாயகக் கடமையைத் திட்பமாக நிறைவேற்றியுள்ளது.
ஓர் இயக்கத்தின் அடி முதல் முடி வரையிலான கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் பொதுக்குழு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான லட்சிய இலக்கணத்தைப் அண்ணா, நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி வரையறுத்து நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த அரசியல் இலக்கணத்துக்கேற்ப நாம் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து கவனமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அண்ணா இப்போது இல்லை; கருணாநிதி இல்லை. அண்ணாவுக்கு அருமைத் தம்பியாக, தலைவர் கருணாநிதிக்கு உற்ற நண்பராக காலமெலாம் இருந்து, எனக்கு பெரியப்பாவாக, அரசியல் பயிற்றுவித்த பேராசிரியரும் இல்லை. நம்மிடையே நடமாடிக் கொண்டிருந்த இவர்கள் மூவரும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படங்களாக மேடையில் வீற்றிருந்தனர். அவர்களுக்கு மலர் தூவி என் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தைச் செலுத்தினேன்.
கழகத்தின் மூத்த முன்னோடி, தலைவர் கருணாநிதியின் நிழல் போல நீங்காதிருந்த அன்பிற்குரிய ஆர்க்காட்டார், கழகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு, பொதுக்குழு மேடையில் அவர் அமர்ந்து, கழகத் தலைவராக உங்களில் ஒருவனான நான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிற அறிவிப்பை வெளியிட்டபோது, பொதுக்குழு நடைபெற்ற சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் ஹாலில் எழுந்த கரவொலியும் ஆர்ப்பரிப்பும், அலைகளின் பேரோசையை விஞ்சி, எனக்குப் பெருமகிழ்ச்சியை மட்டுமல்ல, பெரும் பொறுப்பு என் தோளில் இரண்டாவது முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது என்கிற கவனத்துடன் கூடிய எச்சரிக்கை உணர்வையும் சேர்த்தே ஏற்படுத்தியது. அந்த உணர்வுடன்தான் நான் மேடையில் ஏறி, பொதுக்குழு உறுப்பினர்களின் திருமுகங்களைக் கண்டு பரவசமடைந்தேன்.
பொதுக்குழுவுக்கு வரும் வழியெங்கும் கழகத்தின் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று வாழ்த்து முழக்கமிட்டு, வாஞ்சையுடன் தங்கள் அன்பினை வெளிப்படுத்தி, பரிசுகளை வழங்கி, உங்களில் ஒருவனான எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும், நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வழங்கினார்கள். லட்சோப லட்சம் எளிய தொண்டர்களின் இணையற்ற இயக்கமல்லவா இது! வழிநெடுக இருந்த அந்தத் தொண்டர்களின் பிரதிநிதிகள்தான் நாம் என்பதை நினைவூட்டுவதாகவே பொதுக்குழு அரங்கம் அமைந்திருந்தது.
கிளைகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரை உள்கட்சி ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட பிறகே பொதுக்குழு கூடி, உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகவும், கழகப் பொதுச் செயலாளராக அண்ணன் துரைமுருகன், பொருளாளராக சகோதரர் டி.ஆர்.பாலுவையும் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது. நாங்கள் முறைப்படி தேர்வு பெற்றவுடன், முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்களாக இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கழக சட்டதிட்டங்களுக்குட்பட்டு மீண்டும் நியமிக்கப்பட்டனர். மகளிருக்குரிய துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு அன்புத் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. நியமிக்கப்பட்டார்.
தங்கை கனிமொழி தனது ஏற்புரையில், “அண்ணா.. அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன். கருணாநிதி இடத்தில் உங்களை இந்த நாடு பார்க்கிறது. உங்கள் வழிகாட்டுதலை எதிர்நோக்குகிறது” என்று குரல் தழுதழுக்க, உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார். நான் உரையாற்றும்போது, அண்ணா இல்லை.. கலைஞர் இல்லை என்பதை எடுத்துக்காட்டி, அவர்கள் இல்லாத நிலையில், இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை சுமப்பது எத்தகைய கடினமான பெரும்பணி என்பதையும் என்னென்ன சவால்கள் நமக்கு எதிரே ஏராளமாக இருக்கின்றன என்பதையும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்களில் ஒருவனான என்னுடன், உயிர்நிகர் தலைவர் கருணாநிதி அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் துணைநிற்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
பொதுக்குழுவில் என் பேச்சில் குறிப்பிட்டதுபோல, “நம்மைப் போல இலட்சக்கணக்கான தோழர்கள், தொண்டர்கள் இந்தத் தமிழினத்துக்கு உழைக்க சுயமரியாதை காக்கக் காத்திருக்கிறார்கள். நமது பொறுப்பும் கடமையும் மிக மிகப் பெரியது. எந்தப் பொறுப்பாக இருந்தாலும், அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் பொறுப்புகள் தொடரும். மறந்துவிடாதீர்கள்!
நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற கவலையான நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்விடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது” என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பதவிப் பொறுப்புக்கு வர இயலாமல் போன இயக்கத் தோழர்களை அரவணைத்துச் செயல்படுங்கள். வெறும் வாயை மெல்லும் அரசியல் எதிரிகளின் வாயில் அவல் அள்ளிப் போடுவது போன்ற சொல்லையும் செயலையும் தவிர்த்திடுங்கள். நம்முடைய லட்சியம் உயர்வானது. நமக்கான பாதை தெளிவானது. ஆனால், பயணம் எளிதானதல்ல. மதவெறிச் சக்திகளும், வெறுப்பரசியல் கூட்டமும், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கின்ற சதிகளும் அடிக்கு அடி குறுக்கிடுகின்ற காலம் இது. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு பயணிக்கின்ற வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. மக்களின் பேராதரவும் நமக்கு இருக்கிறது.
கழக அமைப்பு மேலும் வலிவு பெறும் வகையில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை அதிகளவில் நடத்துங்கள். கழகத்தின் கொள்கைகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்களை, திண்ணைப் பிரச்சாரங்களை நடத்துங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்ந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுங்கள்.
அரசியல் எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள். முப்பெரும் விழாவில் நான் சொன்னது போல, நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற வெற்றியினை அடைய, களப் பணியாற்றுங்கள்.
தலைவனாக அல்ல, உயிர்நிகர் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தலைமைத் தொண்டனாக உங்களில் ஒருவனான நானும் களத்தில் முதன்மையாக நிற்பேன். பொதுக்குழுவில் சொன்னதை பொதுமக்களிடம் கொண்டு சென்று செயல்படுத்துவோம். கடைக்கோடித் தொண்டர் முதல் கட்சித் தலைவர்கள் வரை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி மலர் தூவி, நாட்டு நலப் பணியினை நாள்தோறும் தொடர்கிறேன்" என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT