Published : 10 Oct 2022 01:30 PM
Last Updated : 10 Oct 2022 01:30 PM
விழுப்புரம்: "எல்லா மாநிலங்களுக்கும் தனி அடையாளங்கள் உள்ளன.அதில் முதன்மை அடையாளம் மொழி. அந்த முதன்மை அடையாளத்தையே அழித்துவிட்டு, உங்கள் அடையாளத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள்.அதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தி மொழி திணிப்பு குறித்த முதல்வர் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " நான்தான் முதலில் அறிக்கைவிட்டேன். மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில், இந்தி கட்டாயமாக படிக்க வேண்டும் என்று நேற்று உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது அபத்தமானது, ஆபத்தானது. இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும். நேரு பிரதமராக இருந்த காலத்தில், நமக்கெல்லாம் உறுதியளித்தார். 1965-ல் ஒரு சட்டம் வந்தது. இந்தி பேசாத மாநிலங்களில், அவர்கள் விருப்பபடாமல், இந்தியை நாங்கள் திணிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். காரணம் அப்போது மிகப்பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் எல்லாம் நடைபெற்றது.
இடைப்பட்ட காலத்தில் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போதுள்ள பாஜக ஆட்சி வேண்டுமென்றே, இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிப்பதை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை கடுமையாக எதிர்ப்போம். இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தால், குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கட்டாயம் இந்தியை படித்தே ஆகவேண்டும் என்று திணித்தால், கடுமையாக எதிர்ப்போம்.
இந்தியாவில் தேசிய மொழி என்பது எதுவும் கிடையாது. அலுவல் மொழிதான் இருக்கிறது. அதில் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. அவையெல்லாமே அலுவல் மொழிதான். தமிழ், கன்னடம், மலையாளம், மராட்டி, போல இந்தியும் ஒரு அலுவல் மொழிதான். இணைப்பு மொழி ஆங்கிலம். தற்போது இந்த நிலைக்குழு, இணைப்பு மொழி ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை திணிக்க பார்க்கிறது. இதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், கடந்த காலங்களைவிட மிக கடுமையான போராட்டம் நடக்கும்.
எல்லா மாநிலங்களுக்கும் தனி அடையாளங்கள் உள்ளன.அதில் முதன்மை அடையாளம் மொழி. அந்த முதன்மை அடையாளத்தையே அழித்துவிட்டு, உங்கள் அடையாளத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள்.அதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...