Last Updated : 03 Nov, 2016 02:26 PM

 

Published : 03 Nov 2016 02:26 PM
Last Updated : 03 Nov 2016 02:26 PM

தேனி: கிடப்பில் அகல ரயில் பாதை திட்டம்: குரல் கொடுப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்?

மதுரை- போடிக்கு சுமார் 99 கி.மீ. தூரத்திற்கு அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப் பட்டது. இத்திட்டத்துக்கு, கடந்த 2008-ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரூ.140 கோடி நிதி ஒதுக்கி, அதற்கான திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. அகல ரயில்பாதை பணிக்காக கடந்த 2010 டிசம்பரில் மதுரை- தேனி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பழைய தண்டவாளம் பெயர்த்து எடுக்கப்பட்டு பணி துவங்கியது. புதிதாக 4 பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டன. வழியில் 100-க்கும் மேற்பட்ட சிறிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட்டன. ஆண்டிபட்டி கனவாய் மலையை குடைந்து, ரயில் பாதை அமைக்க, ரயில்வே வாரியமும் ஒப்புதல் வழங்கியது. ஆனாலும், ரயில்வே பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி, ஏற்கெனவே சர்வே பணி, குன்னூர் அருகில் பாலம் அமைத்தல் போன்ற அகலப்பாதை பணி தொடர்ந்து கிடப்பில் உள்ளது.

இது பற்றி தேனி, மதுரை பகுதி மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுக்காததால் தேனி, போடி மக்களின் ரயில் பயணக் கனவு நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இத்திட்டத்தால் போடி மேற்கு தொடர்ச்சி மலையை குடைந்து கேரளாவுடன் இணைக்கும் முயற்சியும் கிடப்பில் உள்ளது. எம்பி,எம்எல்ஏக்கள் இந்த அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற வலியுறுத்தவேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் கூறியதாவது: மதுரை- போடி அகலரயில்பாதை திட்டத்திற்கு முழு நிதி ஒதுக்கீடு இன்றி தொடர்ந்து தொய்வு நிலையில் உள்ளது. இப்பணி முடிந்து, போடி-கோட்டயத்திற்கு புதுப்பாதை அமைக்கவேண்டும். இது கேரளா, மதுரை தொழில் வர்த்தகத்திற்கு பெரிதும் உதவிகரமாக அமையும்.

அகலப்பாதையால் கேரளாவில் இருந்து போடி, தேனி, மதுரை, திண்டுக்கல் வழியாக வடமாநிலங்களுக்கு ரயில்கள் துரிதமாக செல்ல வாய்ப்புள்ளது. இதன்மூலம் தொழில் வர்த்தகம், சுற்றுலா மேம்படும். சபரிமலைக்கு செல்வோருக்கு வசதியாக திண்டுக்கல், பெரியகுளம், தேனி வழியாக ஒரு ரயில் பாதை உருவாக்கவேண்டும். இத்திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து மத்திய நிதி அமைச்சர், ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், கோரிக்கை கடிதங்கள் அனுப்பி உள்ளோம். இத்திட்டத்திற்கு முழுமையான நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x