Last Updated : 02 Nov, 2016 08:48 AM

 

Published : 02 Nov 2016 08:48 AM
Last Updated : 02 Nov 2016 08:48 AM

‘வீடு பூட்டியிருக்கிறது’ என தாமதப்படுத்தி விலை உயர்ந்ததும் சிலிண்டரை விற்று மோசடி: ஊழியர்களுக்கு காஸ் ஏஜென்சிகள் உடந்தையா? - விசாரணைக்கு உத்தரவு

‘வீடு பூட்டியிருக்கிறது’ என்று பொய் யான காரணம் கூறி, நுகர்வோரிடம் சிலிண்டர்களை சில நாட்கள் தாமதப்படுத்தி அதிக விலைக்கு விற்று மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஏஜென்சிகளிடம் விசாரணை நடத்த இன்டேன் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 1.69 கோடி காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. காலியான சிலிண்டருக்கு பதிலாக புதிய சிலிண்டர் பதிந்தால், 2 முதல் 7 நாட்களில் விநியோகம் செய்யப்படு கிறது. இப்பணிகளை காஸ் நிறுவனங் களின் விநியோகஸ்தர்கள் மேற்கொள் கின்றனர்.

காஸ் சிலிண்டர் வேண்டி போன் மூலம் முன்பதிவு செய்தால், அடுத்த சில நாட்களில் அதற்கான பற்றுச்சீட்டு தயாரிக்கப்படும். அது தயாரான 48 மணி நேரத்தில் சிலிண்டர்களை விநியோ கிக்க வேண்டும். ஆனால், சிலிண்டருக் கான முன்பதிவை வேண்டுமென்றே ரத்து செய்துவிட்டு, வேறொரு நாளில் கூடுதல் விலைக்கு சிலிண்டர் விற்கப்படு வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விக்னேஷ் என்பவர் கூறியதாவது:

எங்கள் வீட்டில் கடந்த மாதம் சிலிண் டர் தீர்ந்தது. புதிய சிலிண்டர் வேண்டி சில நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தோம். எங்கள் முன்பதிவை ஏற்றுக்கொண்ட ஏஜென்சி, பற்றுச்சீட்டு தயாராகிவிட்டதாகவும், விரைவில் சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தது. விரைவில் சிலிண்டர் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ‘உங்கள் வீடு பூட்டியிருந்ததால் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது’ என்று குறுஞ்செய்தி வந்தது. அதில் குறிப்பிட்டிருந்த தேதியில் எங்கள் வீடு பூட்டப்படவில்லை.

தவறான தகவலைச் சொல்லி முன் பதிவை ரத்து செய்த ஏஜென்சியினர், சில நாட்கள் கழித்து ரூ.40 அதிகம் வைத்து சிலிண்டரை 1-ம் தேதி (நேற்று) விநியோகித்தனர். இந்த இடைவெளி யில் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏஜென்சியினர் திட்டமிட்டு மோசடியில் ஈடுபடுவதுபோல் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி இன்டேன் நிறுவனத்தின் தமிழக பிரிவு மூத்த மேலாளர் குமாரிடம் கேட்டபோது, ‘‘சென்னையின் குறிப்பிட்ட சில பகுதியில் இதுபோன்ற புகார்கள் அதிகம் வந்தன. ஏன் இப்படி நடக்கிறது என்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஏஜென்சியிடம் விசாரணை நடத்த உள்ளோம். விநியோகிக்கும் நபர்கள் மோசடி செய்கிறார்களா, வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்பதை விசாரித்து, அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும்’’ என்றார்.

காஸ் விநியோகம் செய்யும் மையம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றும் சாரதி என்பவரிடம் கேட்டதற்கு, ‘‘வீடு பூட்டியிருந்தது என்று குறுஞ்செய்தி அனுப்பினால், முன்பதிவு ரத்து செய்யப் படாது. சம்பந்தப்பட்டவருக்காக தயாரிக் கப்பட்ட பற்றுச்சீட்டு மட்டுமே ரத்தாகும். புதிதாக பற்றுச்சீட்டு உருவாக்கப்பட்டு ஒருசில நாட்களில் சிலிண்டர் விநியோ கிக்கப்படும். அப்படி விநியோகிக்கும் நாளில் என்ன விலையோ அந்த விலை தான் வசூலிக்கப்படும். இதுதொடர்பான தகவல்களை காஸ் நிறுவனத்திடம் தெரிவிப்போம். அந்த தகவல் அடிப்படை யில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும்’’ என்றார்.

இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகனிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘காஸ் சிலிண்டரை குறிப்பிட்ட தேதியில் விநியோகிக்காமல் ‘வீட்டு பூட்டியிருந்தது’ என்று ரத்து செய்வது பல இடங்களில் நடக்கிறது. வீடுகளுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெறுபவர்கள் என்பதால், பெரும்பாலும் அவர்கள்தான் இதற்கு காரணமாக இருக்கின்றனர். இதற்கு சில ஏஜென்சிகளும் உடந்தையாக உள்ளன. காஸ் நிறுவனங்கள்தான் தீவிரமாக கண்காணித்து, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x