Published : 12 Nov 2016 12:49 PM
Last Updated : 12 Nov 2016 12:49 PM
பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ளும் மத்திய துணைக் குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்தவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த உறுதியான தகவல் இல்லாததால் தமிழக பொதுப்பணித் துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, அணையில் 152 அடியாக நீர் தேக்கும் பொருட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவுக்கு உதவி செய்ய மத்திய நீர் வள ஆணையத்தின் செயற்பொறியாளர் அம்பரீஷ் கரீஷ் கிரிஷ் தலைமையில் தமிழகப் பிரதிநிதிகளாக பெரியாறு அணையின் செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரளப் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், உதவி செயற்பொறியாளர் பிரசித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மத்திய துணைக் குழுவினர் ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடி அணையை ஆய்வு மேற்கொண்டு மூவர் குழு தலைவரிடம் அறிக்கை கொடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந் நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி.நாதன் பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு மூவர் குழுவின் புதிய தலைவராக அணை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் முதன்மை பொறியாளர் டி.ஆர்.கே.பிள்ளை நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் மத்திய துணை குழுவில் தமிழக பிரதிநிதியாக இருந்த சவுந்தரம், கேரளப் பிரதிநிதியாக இருந்த பிரசித் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகப் பிரதிநிதியாக சாம் இர்வீன், கேரளப் பிரதிநிதியாக லிவிங்ஸ்டன் நியமிக்கப்பட்டனர். இந்த துணைக் குழுவினர் கடைசியாக செப்டம்பர் 9-ம் தேதி அணையை ஆய்வு செய்தனர். இந் நிலையில் மத்திய துணைக் குழு தலைவராக இருந்த அம்பரீஷ் கரீஷ் கிரிஷ் திடீரென புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அணையின் நீர்வரத்து, வெளியேற்றம் உட்பட பல்வேறு ஆய்வு செய்வதில் மத்திய துணைக் குழுவின் பங்கு மிக முக்கியமானது. இக்குழுவினர் கொடுக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அணையில் மராமத்துப் பணி செய்து நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந் நிலையில், துணைக் குழு தலைவர் இல்லாமல் கடந்த 3 மாதங்களாக அணையில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை, புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை மத்திய துணைக் குழு தலைவர் அலுவலகத்தில் இருந்து முறையான தகவல் வராததால் நாங்கள் குழப்பம் அடைந்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT