Published : 09 Oct 2022 12:05 PM
Last Updated : 09 Oct 2022 12:05 PM
சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாத இடங்களில் தற்காலிக இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மாநகரத்தில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வட கிழக்கு பருவமழைக்கு முன்பாக நிறைவடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வடிகால்கள் இல்லாத சென்னை மாநகரம் மீண்டும் ஒரு பெருவெள்ளத்தை சந்திக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
சென்னையில் பல்வேறு பிரிவுகளாக சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மழைநீர் மற்றும் வெள்ளத்தடுப்பு கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் பல பணிகள் நீண்டகால பணிகள் என்பதால், அவை உடனடியாக நிறைவடையும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த பணிகள் இப்போது நிறைவடையாததால் நகரப்பகுதிகளில் மழை நீர் வடிவதில் பெரிய சிக்கல்கள் ஏற்படாது.
ஆனால், மாநகரப் பகுதிகளில் ரூ.983 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய அவசர கால பணிகள் ஆகும். அதனால் அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மே மாதத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த பணிகள் இப்போது வரை விரைவுபடுத்தப்படவில்லை.
வடகிழக்கு பருவமழை அடுத்த இரு வாரங்களில் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதுள்ள வேகத்தில் பணிகள் தொடர்ந்தால், சிறிய அளவில் மழை பெய்தால் கூட சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், பருவமழைக்குள்ளாக இந்தப் பணிகளை நிறைவு செய்ய முடியாது என்பது தான் உண்மையாகும்.
எந்த வகையில் பார்த்தாலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை எனும் போது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் கூட எந்த இடத்திலும் மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவடையவில்லை. ஆங்காங்கே துண்டு துண்டாகத் தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை இணைக்கப்படாவிட்டால், எந்த இடத்திலும் மழைநீர் வடியாது.
அத்தகைய சூழலில் கடந்த ஆண்டை மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும். இதை உணர்ந்து கொண்டு எங்கெல்லாம் வடிகால்களை இணைக்க முடியுமோ, அந்த பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் வெள்ள பாதிப்பை ஓரளவு தடுக்கலாம்.
எங்கெல்லாம் அதிக தூரத்திற்கு கால்வாய் வெட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழை நீர் வெளியேற வகை செய்ய வேண்டும். அதேபோல், புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் தங்கு தடையின்றி வெள்ள நீர் வெளியேறுவதை சோதனைகளை நடத்தி உறுதி செய்ய செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். மழை நீர் வடிகால் அமைக்கப்படும் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இவை சரி செய்யப்படாவிட்டால், மழைக்காலங்களில் மிக மோசமான விபத்துகள் ஏற்படக்கூடும். அதை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த அனைத்து சாலைகளும் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment