Published : 09 Oct 2022 04:20 AM
Last Updated : 09 Oct 2022 04:20 AM
வடசென்னை பகுதியில் ரூ.167 கோடியில்நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்பணிகளை நேற்று ஆய்வு செய்தமுதல்வர் மு.க.ஸ்டாலின், எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு பணிகள் சிறப்பாக நடந்திருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இம்மாத இறுதியில்வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நடைபெற்று வந்த பணிகள், தற்போது முடியும் தருவாயில் உள்ளன.
வடசென்னை என்எஸ்சி போஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.24 லட்சத்தில் 46 மீட்டர் நீளத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ரூ.2 கோடியே 6 லட்சத்தில் 600 மீட்டர் நீளத்திலும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல, வால்டாக்ஸ் சாலையில்ரூ.33 கோடியில் 4.6 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்நடைபெற்று வருகின்றன. அதேபோல, பட்டாளம் புளியந்தோப்பு பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேசின் பாலம் அருகில்ரூ.20 கோடியில், வடக்கு பக்கிங்ஹாம்கால்வாயில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கொளத்தூர் வேலவன் நகரில் பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி, கொளத்தூர் உள்வட்டச் சாலையில் வீனஸ் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் பகுதிகளில் ரூ.2.80 கோடியில் 200 ஹெச்.பி. திறன்கொண்ட, விநாடிக்கு 2.4 கன மீட்டர்நீரை வெளியேற்றும் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணிகள் ஆகியவற்றையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
மொத்தம் ரூ.167 கோடியே 8 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்துக்குள் விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியமுதல்வர், "கடந்த வாரம் தென்சென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு ஏறத்தாழ 70 முதல்80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது வடசென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.அவ்வப்போது மழை பெய்து கொண்டிருப்பதால், பணிகள் தடைபட்டுள்ளன.
குறைந்தபட்சம் 15 நாட்கள் முதல் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் அனைத்துப்பணிகளும் முடிவடைந்துவிடும் என்று நம்பிக்கை உள்ளது. மேலும், எப்படிப்பட்ட மழை வந்தாலும், அதைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளன" என்றார்.
ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்பி-க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், எம்எல்ஏ-க்கள் ஆர்.மூர்த்தி, இ.பரந்தாமன், தாயகம் கவி,துணை மேயர் மு.மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா,
நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், சென்னை குடிநீர் வாரியமேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment