Published : 09 Oct 2022 05:32 AM
Last Updated : 09 Oct 2022 05:32 AM

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது - சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (அக்.9) நடைபெறுகிறது. இதில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட உள்ளார். இதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு,
பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுவோரிடம் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு
யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். அதேபோல, பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுக்குழு தனக்கு வழங்கும் சிறப்பு அதிகாரம், உரிமையின் அடிப்படையில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களை நியமனம் செய்து, அறிவிப்பார். 4 தணிக்கை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பொதுக்குழுவில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், திமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழுக் கூட்ட அரங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம்போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்போருக்கு சைவ, அசைவ உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 2 தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x