Published : 08 Oct 2022 01:10 PM
Last Updated : 08 Oct 2022 01:10 PM
திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் 3 சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ விவேகானந்த சேவாலய காப்பகம் வருவாய்த் துறை முன்னிலையில் இன்று மூடப்பட்டது.
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர் . 6-ம் தேதி காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தும், எஞ்சிய 12 மாணவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையிலும் இருந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
எஞ்சிய 11 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசால் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசன் தலைமையிலான குழுவினர் மற்றும் சமூக நலத் துறை இயக்குநர் வளர்மதி தலைமையிலான குழுவினர் நேரில் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், “காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுகிறது” என்று அறிவித்தார் .
இதனை அடுத்து இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறையினருக்கு காப்பகத்தை மூட உத்தரவிட்டனர் . இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது. மேலும், உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்த 3 மாணவர்கள் சடலங்கள், திருப்பூர் தெற்கு மின் மயானத்தில் இன்று எரியூட்டப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT