Published : 08 Oct 2022 12:31 PM
Last Updated : 08 Oct 2022 12:31 PM

இந்த ஆண்டு ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர்கள்

சென்னை: இந்த ஆண்டு ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (அக். 8) தொடங்கி வைத்தனர்.

இதன் பிறகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், " முதலமைச்சர் சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் கூட்டுக் குடிநீர் திட்டமானது குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 548 இடங்களில் சுமார் ரூபாய் 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் குடிநீர் திட்டப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள ஜைக்கா (JICA) நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதவிர பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை போன்ற நீர்த்தேக்கங்களில் இயற்கையாகவே நீரை தேக்கி அந்த தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

வட சென்னை பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கழிவு நீர் குழாய்களே செயலாக்கத்தில் உள்ளன. பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ளன. இன்று இந்த பகுதியில் புதிய கழிவுநீர் உந்து நிலையம், குடிநீர் வாரிய பகுதி அலுவலகம் மற்றும் புதிய கழிவுநீர் குழாய் பதிப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அனைத்து கழிவுநீரும் முறையாக வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறும்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x