Published : 08 Oct 2022 11:47 AM
Last Updated : 08 Oct 2022 11:47 AM
சென்னை: எல்கேஜி, யுகேஜி சிறப்பாசிரியர்களுக்கு குறைவான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்கேஜி, யுகேஜி சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்லாமல், நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான துணிச்சலையும் பயிற்றுவிப்பவர்கள் ஆசிரியர்கள். ‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ என்பதற்கேற்ப ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் திமுக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அண்மையில், 2,381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளிக் கல்வித் துறை ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், மேற்படி சிறப்பாசிரியர்களுக்கான மாதச் சம்பளம் 5,000 ரூபாய் என்றும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுக்கு போதுமான கல்வித் தகுதி இல்லையென்றால் தொடக்கக் கல்வியில் பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுடைய பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆசிரியருக்கு மாத ஊதியம் 5,000 ரூபாய் என்றால், ஒரு நாள் சம்பளம் என்பது வெறும் 166 ரூபாய்தான்.
முதலில் மழலையர் வகுப்புகளை நிறுத்த முடிவெடுத்த திமுக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அதனை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்ச ஊதியத்தை கூட வழங்காமல், 11 மாதங்கள் என கால அளவை நிர்ணயம் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தகுதியான ஆசிரியர்களை நியாயமான ஊதியத்தில் அமர்த்த வேண்டியது அரசின் கடமை.
இதில் ஆசிரியர்களின் நலன் மட்டுமல்லாமல் குழந்தைகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதை அரசு உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தால் அது அனைவருக்கும் நலம் பயப்பதாக அமையும். இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 10,000 ரூபாயாக உயர்த்தவும், 11 மாதம் என்ற கால அளவை ரத்து செய்யவும், மேற்படி வகுப்புகளுக்கு நிரந்தரமாக, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT