Published : 21 Nov 2016 03:00 PM
Last Updated : 21 Nov 2016 03:00 PM
மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பழங்குடியினர் கிராம மாணவர்களுக்கு வழிகாட்டியாக, நீலகிரி மாவட்ட காவல்துறை உருமாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் தமிழக - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதால், அவர்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது. இதனால், காவல்துறை அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.
எல்லையில் பெரும்பாலும் பழங்குடியின கிராமங்கள் உள்ள தால், அவர்களிடம் மாவோயிஸ்ட் கள் உதவி கோருவதுடன், தங்கள் இயக்கத்தில் அவர்களை இணைக்க முயற்சி மேற்கொள்வார்கள் என காவல்துறை கருதுகிறது. மாவோயிஸ்ட் பக்கம் சாயாமல் இருக்க, பழங்குடியினரின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
தத்தெடுப்பு
இதற்காக, தனியார் அமைப்புகள் உதவியுடன் எல்லையோரத்தில் உள்ள கிராமங்களை காவல்துறை தத்தெடுத்தது. இக்கிராமங்களில், மாவட்ட நிர்வாகம் மூலமாக சிறப்பு முகாம் நடத்தி, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக காவலர் தேர்வுக்கான பயிற்சி முகாமை, காவல்துறை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது, “காவல்துறையில் 30 ஆயிரம் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு, ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறையில் மொத்தம் உள்ள பணியிடங்களில், 30 சதவீதம் மட்டுமே உள்ளூர் மக்கள் உள்ளனர். 70 சதவீதம் வெளியூரைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தேர்வில், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக, காவல்துறை மூலமாக உதகையில் இரண்டு மாதங்கள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 29 வயதுக்கு உட்பட்ட பழங்குடியின மாணவர்கள் பங்கேற்கலாம்.
இவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவையில் இருந்து தனியார் பயிற்சியாளர் வரவழைக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றால், காவலர் பணி கிடைக்கும்.
ஏழ்மையைப் போக்க கல்வி தான் ஆயுதம். மாநகரங்களில் இருந்தால் தான் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என்பது மாயை. இத்தகைய பயிற்சி வகுப்புகள் மூலமாக, பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சமுதாயத்தில் அங்கீகாரம், கவுரவம் கிடைக்கும்.
இது காவல்துறையின் பணி இல்லை என்றாலும், சமுதாயத்தின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டே பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் பங்கேற்கும் மாணவர்களின் முழு விவரங்கள், தொலைபேசி எண்களைப் பதிவு செய்கிறோம். இதனால், ஒவ்வோர் மாணவரையும் கண்காணிக்க முடிகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT