Published : 08 Oct 2022 05:08 AM
Last Updated : 08 Oct 2022 05:08 AM
சென்னை: ஆன்மிகத்தின் ஆதாரமாக விளங்கும் திருக்குறள் வெறும் வாழ்க்கைநெறி நூலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது. அதை வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
குறள் மலைச் சங்கம் சார்பில் ‘திருக்குறள் மாநாடு - 2022’, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நேற்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார். ‘திருக்குறள் உலகுக்கான நூல்’ என்ற நூலையும் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:
கடந்த ஓராண்டாக ஒவ்வொரு குறளையும் படித்து, அதன் முழுஅர்த்தத்தையும் புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறேன். அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் புதைந்துள்ள அர்த்தங்கள், ஆழ்ந்த சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. திருக்குறளால் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை. உலகுக்கு தேவையான நெறிகளை ஒன்றரை வரியில் அடக்கிய திருவள்ளுவர் மாபெரும் மேதை.
இறை பக்தியில் தொடங்கி, பிறப்பு முதல் இறப்பு வரை ஐம்புலன்களை எப்படி கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்பதை திருக்குறள் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கோபத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒருவன், கடவுளுக்கும் அரிதான பிரம்ம உலகத்தை அடையலாம் என்கிறார் வள்ளுவர்.
துறவறம், அகிம்சை பற்றியும் திருக்குறள் பேசுகிறது. பிறப்பு - இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சி முறையில் இருந்து மனிதன் தன்னை விடுவித்துக் கொள்ள திருக்குறள் உதவுகிறது. தர்மம், நீதி சாஸ்திரம் கலந்த கலவையாகவே திருக்குறளை பார்க்கிறேன்.
ஆனாலும், இதை ஒரு வாழ்க்கை நெறி நூலாக மட்டுமே கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பேசி வருகிறோம். அது கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேச முன்வருவது இல்லை.
திருக்குறள்தான் நமக்கான ஆன்மிகத்தின் ஆதாரம். அதில் ஆன்மிக அம்சங்கள் நிறைய உள்ளன. அரசியலுக்காக சிலர் உண்மையை சொல்ல மறுக்கின்றனர். முதன்முதலில் திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப்பிடம் இருந்தே இது தொடங்கிவிடுகிறது. அவர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்தபோது, அதில் இருந்த ஆன்மிகத்தை திட்டமிட்டு புறந்தள்ளிவிட்டார்.
திருக்குறளை சிலர் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த நூலை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே காட்ட நினைக்கின்றனர். நன்கு புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் திருக்குறளின் முழுமையான அர்த்தம் தெரியும். திருக்குறள் ஒரு பகுதி மக்களுக்கான புத்தகம் அல்ல. அது உலகத்துக்கான நூல்.
மொழிபெயர்ப்பு புத்தகங்கள் திருக்குறளின் உண்மை நிலையைபேசவில்லை. எனவே, திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் முழுமையாக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், குறள் மலைச்சங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார், கவுரவ தலைவர் மலர்விழி, மனுநீதி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT