Published : 08 Oct 2022 04:43 AM
Last Updated : 08 Oct 2022 04:43 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆண்டுதோறும் சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. அன்று, மறைந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா மற்றும் மறைந்த எம்எல்ஏ-க்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் எனது அறையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறும். எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்று அதில் ஆலோசிக்கப்படும். அடுத்த நாள் (அக். 18) துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, அதன் மீதான விவாதங்கள் நடத்துவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும்.
சட்டப்பேரவையில் நடைபெறும் கேள்வி நேரம் ஏற்கெனவே நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முழு நிகழ்வையும் ஒளிபரப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் முழுமையாக நேரலை வழங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இருக்கைகள் ஒதுக்கீடு?
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதாக அக்கட்சி கொறடா கடிதம் அளித்துள்ளார். அதேபோல, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர்.
இவர்களுக்கு ஏற்கெனவே அருகருகே இருக்கைகள் வழங்கப்பட்டன. கொறடா கொடுத்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எவ்வாறு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, "ஓபிஎஸ், இபிஎஸ் அளித்த கடிதங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கு, எந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது என்னுடைய முடிவு. இருவருமே, தமிழக முதல்வராக இருந்தவர்கள். அவர்கள் சட்டப்பேரவையில் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அவர்களது பிரச்சினைகளை, அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வார்கள். நாங்கள் சட்டப்பேரவை மரபுப்படி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத் தொடரில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை ஆகியவை பேரவையில் முன்வைக்கப்பட்டு, அதுகுறித்து விவாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT