Published : 07 Oct 2022 04:20 PM
Last Updated : 07 Oct 2022 04:20 PM
சென்னை: “கடந்த 2018 அதிமுக ஆட்சியில், தன்னால் அடிக்கல் நாட்டப்பட்ட ராயபுரம் போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டும் வேலை செய்வதா?” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம் வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி ரூ.13.40 கோடி மதிப்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்.7) காலை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 70 முதல் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 முதல் 5 சதவீதப் பணிகள்தான் முடிக்க வேண்டியுள்ளது. அதனை விரைவில் முடித்துவிடுவோம். அதேபோல், எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும், தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன" என்று கூறியிருந்தார்.
மாண்புமிகு அம்மா அரசில் (2018)என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட இராயபுரம் போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஓட்டும் வேலை செய்வதா????? pic.twitter.com/e6Mqv942ul
இந்த நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த செய்தியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் தொடங்கி வைத்ததாகவும், அந்த திட்டத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு அம்மா அரசில் (2018) என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட ராயபுரம் போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டும் வேலை செய்வதா?" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் தொடங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT