Published : 07 Oct 2022 01:06 PM
Last Updated : 07 Oct 2022 01:06 PM

திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப் படம்

சென்னை: திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை என்றும், அந்தப் புத்தகத்தை முழுமையாக மொழபெயர்க்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு அர்த்தங்கள் நிறைந்துள்ளன.

திருக்குறள் நூலை பலரும் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். பக்தி தொடங்கி ஐந்து புலன்களை அடக்கி ஆளுதல் வரை ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் திருக்குறள் பேசுகிறது. வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே திருக்குறளை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கருதப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை.

இந்தப் பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் துவங்கியது. குறிப்பாக, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஜி.யு.போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் ‘முதன்மைக் கடமை’ (PRIMAL DUTY) என எழுதியுள்ளார்.

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. இந்தப் புதக்கத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த நூலை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும்.

இந்தியா வளர்ந்து கொண்டு்ள்ளது. இந்தியா வரும் 2047-ம் ஆண்டு உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளரக் கூடாது. நாடு வளர வளர ஆன்மிகமும் வளர வேண்டும். திருக்குறளுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதனை யாராலும் தடுக்க முடியாது. உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளிவந்தே தீர வேண்டும்.

திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதக்கங்களை நான் படித்தேன். ஆனால், திருக்குறளின் உண்மை நிலையை அந்தப் புதக்கங்கள் பேசவில்லை. திருக்குறள் புத்தகத்தை முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x