Published : 07 Oct 2022 06:16 AM
Last Updated : 07 Oct 2022 06:16 AM

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். தமிழகத்தில் கரோனா வைரஸ்பரவல் குறைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 2,915 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்டில் 481, செப்டம்பரில் 572 என பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு, டெங்குவின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், சுத்தமான நீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். இதனால், இன்னும் 2, 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம் நடத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன. திறந்தவெளியில் உள்ள சிமென்ட் தொட்டி, தண்ணீர் தொட்டி,ஆட்டுக்கல், உடைந்த மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் கப், தட்டு,தேங்காய் ஓடு, வாளி, டயர் ஆகியவற்றில் மழைநீர், தண்ணீர் தேங்கினால், அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே, அதுபோன்ற பொருட்கள் மற்றும் குவிந்து கிடக்கும் கட்டுமானப் பொருட்களை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x