Published : 07 Oct 2022 06:12 AM
Last Updated : 07 Oct 2022 06:12 AM
கோவை: தேசிய அளவில் உயர்கல்வி பயில சேரும் மாணவர்களின் சராசரி விகிதத்தைவிட, தமிழகத்தில் இரண்டுமடங்கு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார். கோவையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேறிய நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் உயர்கல்வி பயில சேரும்மாணவர்களின் சராசரி எண்ணிக்கையைவிட, தமிழகத்தில் இரண்டுமடங்கு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். இது பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். தேசிய சராசரி 28 சதவீதம் என்றஅளவில் உள்ள நிலையில், தமிழகத்தில் இது, 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. நாட்டில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புவரை 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. சாதிக்க நினைக்கும் இளம் தலைமுறையினர்தான் இதற்கு காரணம்.
நாட்டின் முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புத்துறைக்கும் விண்வெளித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டிடிஎச் சேவை, வானிலை முன்னறிவிப்பு, டெலிமெடிசன் உள்ளிட்டவை விண்வெளித்துறையை நம்பியே உள்ளன. இதில், நம் நாட்டின் தொழில்துறையினர், இளம் தலைமுறையினர் பங்கேற்பதன் மூலம் இந்த துறையில் வளர்ச்சியை எட்ட முடியும். உலகமே காலநிலை மாற்றம் குறித்து பேசி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களிலிருந்து பெற 2016-ம் ஆண்டில்இந்தியா இலக்கு நிர்ணயித்தது.
அந்த இலக்கை 2021 செப்டம்பரிலேயே நாம் எட்டிவிட்டோம். 2047-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற நூற்றாண்டை கொண்டாடும்போது இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும். அதற்கு, மாணவர்களாகிய நீங்கள் எங்கு, எந்த துறையில் இருந்தாலும் அதில்உங்கள் பங்கு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், 588 மாணவிகள், 1,220 மாணவர்கள் உட்பட 1,808 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அமிர்தா விஸ்வ வித்யா பீடம் டீன் (இன்ஜினீயரிங்) சசங்கன் ராமநாதன், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பொதுச்செயலாளரும் அறங்காவலருமான சாம்பூஜிய சுவாமி பூர்ணாமிரிதானந்த புரி, அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் துணை வேந்தர் பி.வெங்கட்ரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...