Published : 07 Oct 2022 04:20 AM
Last Updated : 07 Oct 2022 04:20 AM
ஆதரவற்ற காப்பக சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில், அரசு நிர்வாகம் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் நேற்று விடுத்த அறிக்கை:
திருமுருகன்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்த சேவாலயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்டோர், நிராதரவான நிலையில் இருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயிரிழந்திருப்பது, ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. குழந்தைகள் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்துவோர் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்புள்ளவர்கள் யாரேனும் ஒருவராவது அங்கு 24 மணி நேரமும் பணியில் இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் யாருமே இல்லாத சூழ்நிலையில், இந்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
எனவே இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தைப் பொறுப்பாக்கி, அவர்கள் மீது அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT