Published : 07 Oct 2022 04:25 AM
Last Updated : 07 Oct 2022 04:25 AM
மதுரை மாநகர் திமுக செயலாளராக கோ.தளபதி எம்எல்ஏ தேர்வாகி உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தில் மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பை கட்சியினரிடம் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மேயர், கவுன்சிலர்கள் பொறுப்பேற்று 7 மாதங்கள் முடிந்துவிட்டன. மாநகரின் 100 வார்டுகளில் திமுக தனியாக 67, கூட்டணியுடன் 80 வார்டுகளை வென்றது.
5-ல் 4 மடங்கு இடங்களை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியும் இங்குசுதந்திரமான நிர்வாகத்தை அக்கட்சியினரால் வழங்க முடியாமல் திணறும் நிலை தொடர்கிறது. இந்தச் சூழலில் மதுரை மாநகர் செயலாளராக கோ.தளபதி பொறுப்பேற்றுள்ளார். இது மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகள், கவுன்சிலர்கள் கூறியது: 100 வார்டுகளில் 71 மாநகர் திமுக கட்டுப்பாட்டிலும், 14 அமைச்சர் பி.மூர்த்தி கட்டுப்பாட்டிலும், 15 தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இதற்கு முன்பு மாநகர் திமுகவில் உள்ள 71 வார்டுகளில் 38 மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த கோ.தளபதியிடமும், 31 வார்டுகள் மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்திடமும் இருந்தன.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வென்ற மத்திய தொகுதியைச் சேர்ந்த 16 கவுன்சிலர்கள் திமுகவைச் சேந்தவர்கள். இதில் ஒருவர்தான் மேயர் இந்திராணி. இந்த 16 பேர் மட்டும் அமைச்சர் தியாகராஜன் கட்டுப்பாட்டில் இருந்தனர். மற்றவர்கள் இதர 4 திமுக நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
மேயர் வேட்பாளர் தேர்வில் தியாக ராஜன் ஆதரவு பெற்ற இந்திராணிக்கு வாய்ப்புக் கிடைத்தது. மேயராக தேர் வானவர் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரின் ஆதரவைப் பெற்று நிர்வாகத்தை நடத்துவதே வழக்கம். மதுரையில் மட்டும் இந்த நடைமுறை முற்றிலும் மாறிப்போனது.
அமைச்சர் தியாகராஜனின் முழு கட்டுப்பாட்டில் இந்திராணி செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. திமுககூட்டணி கவுன்சிலர்களை முழுமையாகப் புறக்கணித்ததால் பதவி ஏற்பில்கூடபெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
இந்த விசயத்தில் கவுன்சிலர்களை ஓரணியில் திரட்ட, மற்ற மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர் தியாகராஜனும் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
அமைச்சரை மீறி மேயரும் சமாதான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேய ரும், திமுக கூட்டணி கவுன்சிலர்களும் தனித்தனியாக விடப்பட்டனர். அதிமுக கவுன்சிலர்கள் சிலர்கூட மேயருடன் இணக்கமாகச் செயல்பட்ட நிலையில், பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் விலகியே இருந்தனர்.
இது மாநகராட்சியின் செயல்பாட்டை நேரடியாகப் பாதித்தது. மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் திணறினர். இந்த நிலையை மாற்ற அமைச்சர் தியாகராஜனால் மட்டுமே முடியும் என்ற சூழல்.
அவரும் இறங்கி வரவில்லை. அவரிடம் பேச்சு நடத்த 3 திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர் பி.மூர்த்திஉள்ளிட்ட யாரும் முன்வரவும் இல்லை. இதனால் ஒவ்வொரு முறையும் மாநகராட்சிக் கூட்டம் நடக்கும் போதும் அதன் பின்னரும் மேயர் - திமுக கவுன்சிலர்கள் இடையே விரிசல் அதிகரித்தது.
ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை நீடித்தது. இந்நிலையில், மதுரை மாநகர் திமுக செயலாளர் தேர்தல் நடந்தது. வடக்கு, தெற்கு என இரு மாவட்டமாக இருந்தது ஒன்றாக்கப்பட்டது. அமைச்சர் தியாகராஜன் ஆதரவுடன் அதலை செந் திலும், கோ.தளபதி எம்எல்ஏ இடையே நேரடி போட்டி உருவானது.
முதல்வர் குடும்பத்தினர் ஆதரவுடன் அதலை செந்தில் எப்படியும் தேர்ந்தெடுக்கப்படுவார் என மேயர் இந்திராணி தரப்புநம்பியது. அப்படி வென்றால் கவுன்சிலர்கள் அனைவரும் அமைச்சர் தியாகராஜனின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவர். தாங்கள் நினைத்தபடி மாநகராட்சியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என நம்பினர்.
அமைச்சர் தியாகராஜன் தங்களை மதிக்கவில்லை எனக்கூறி திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கோ.தளபதிக்கு ஆதரவு அளித்தனர். இவரை அமைச்சர் பி.மூர்த்தியும் ஆதரித்தார்.
மாநகராட்சி நிர்வாகத்தால் திமுக செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து முதல்வரிடம் மூத்த நிர்வாகிகள் விளக்கினர். திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பலரும் தளபதிக்காக முதல்வரிடம் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து தளபதி மாநகர் மாவட்டச் செயலாளரானார். தற்போது 4 சட்டப்பேரவைத் தொகுதிகள், 71 வார்டுகள் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. இந்த மாற்றத்தால் முதல் சிக்கல் மேயர் இந்திராணிக்குத்தான்.
அவர் கோ.தளபதியை அனுசரித்துப் போனால் மட்டுமே நிர்வாகத்தை நடத்த இயலும் என்ற நிலை. தளபதி மேயரை ஆதரிக்க வேண்டுமானால் தங்களின் கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள், கவுன்சிலர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
அமைச்சர் தியாகராஜனை மட்டும் நம்பி இருந்ததால் மேயரால் நிர்வாகத்தை அவர் விருப்படி நடத்த முடியாத சூழல் உருவாகிவிட்டது. இதை மேயர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது வரும் நாட்களில் தெரியும்.
கோ.தளபதியின் தேர்வு மதுரை மாநகராட்சியில் நேரடியாக எதிரொலிப்பதைக் கண்கூடாக பார்க்கலாம். இந்தச் சூழலை மாற்ற அமைச்சர் தியாகராஜன் எத்தகைய முயற்சியை மேற்கொண்டாலும் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT