Published : 07 Oct 2022 04:30 AM
Last Updated : 07 Oct 2022 04:30 AM
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்.27 முதல் 30 வரை குருபூஜை நடைபெறுவது வழக்கம்.
2010-ல் நடந்த குருபூஜையில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம், `தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க வேண்டும்' என அங்கிருந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்ற ஜெயலலிதா, `முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படும்' என அறிவித்தார்.
மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, 09.02.2014 அன்று பசும்பொன்னுக்கு நேரில் சென்று 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாளிடம் வழங்கினார். பின்னர் தங்கக்கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
இந்தத் தங்கக் கவசம் குருபூஜையின்போது மட்டும் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு மற்ற நாட்களில் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில்
வைக்கப்படும். தங்கக்கவசம் அதிமுகவின் பொருளாளர் மற்றும் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் பெயர்களில் வைக்கப்பட்டிருக்கும்.
கடந்த ஆண்டுகளில் நடந்த தேவர் குரு பூஜைகளின்போது அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வங்கிக்கு நேரில் வந்து தங்கக் கவசத்தைப் பெற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடப் பொறுப்பாளா்களிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
பசும்பொன்னில் தேவர் குருபூஜை அக்.28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வங்கிப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கவசத்துக்கு உரிமை கோருவதற்கான எழுத்துப்பூா்வக் கடிதம்
திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் வங்கியின் மேலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொருளாளராக தற்போது வரை நீடித்து வருவதாகவும், அதனால் அவரிடமே தங்கக்கவசத்தை ஒப்படைக்க வேண்டுமென அவரது சார்பாக முன்னாள் எம்பி கோபாலகிருஷணன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் ஆகியோர் வங்கி மேலாளரிடம் கடிதம் வழங்கினர்.
இதனால் தேவர் கவசத்தைப் பெறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஈபிஎஸ் - ஓ.பி.எஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
2017-ல் அதிமுக பிளவுபட்டிருந்தபோது ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இடையே வங்கியிலிருந்து தேவரின் தங்கக் கவசத்தை யார் பெறுவது? என்ற பிரச்சினை ஏற்பட்டது. அப்போது இதற்குத் தீர்வு காணும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம், தங்கக் கவசத்தைத் தேவர் நினைவிடப் பொறுப்பாளரிடம் ஒப்படைப்பதில் ஆட்சேபம் எதுவும் இல்லை என்று
இரு தரப்பினரிடமும் கடிதங்கள் பெற்று வங்கியிடம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்போதைய மதுரை ஆட்சியர் வீரராகவ ராவிடம் வங்கி நிர்வாகத்தினர் தங்கக் கவசத்தை ஒப்படைத்தனர். பின்னர் தங்க கவசம் மதுரையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் தங்கக்கவசம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு
மதுரை ஆட்சியர் முன்னிலையில் பாதுகாப்பாக வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஈபிஎஸ் தரப்பினர் கூறுகையில்,
அதிமுக பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனுக்குத்தான் தங்கக் கவசத்தைப் பெறும் முழு உரிமை உள்ளது, என்றனர்.
ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் கூறும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேவரின் தங்கக் கவசத்தை வழங்குவதற்கு ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யவில்லை.
முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஓ. பன்னீர் செல்வம்தான் பசும்பொன்னுக்கு தங்கக் கவசத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு முதன்முதலில் வழங்கியபோது திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் என்பதையும் இந்தத் தருணத்தில் மறந்து விடக்கூடாது, என்றனர்.
இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2017 நடைமுறையை முன்மாதிரியாகக் கொண்டு தற்போதைய நிலையில் இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக அதிமுகவில் இரு தரப்பையும் சாராத தொண்டர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT