Published : 07 Oct 2022 04:30 AM
Last Updated : 07 Oct 2022 04:30 AM
கூடலூர் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை நீரைப் பயன்படுத்தி இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்போகத்துக்காக கடந்த ஜூன் 1-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
லோயர்கேம்ப் முதல் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வரையுள்ள 14,707 ஏக்கரில் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைப் பருவத்தை நெருங்கியுள்ளது.
இப்பகுதியில் விளையும் நெல்லை கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு அரசு சார்பில் கூடலூரில் உள்ள தனியார் நிலத்தில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு திறந்தவெளியில் நெல்லை குவித்துவைக்க வேண்டியிருப்பதால் நெல்லை பாதுகாப்பதில் சிரமம் இருந்தது.
எனவே, இந்த ஆண்டு கூடலூர் - லோயர்கேம்ப் சாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், பொதுப்பணித் துறையின் 5.35 ஏக்கர் நிலம் பயன்பாடின்றி கிடக்கிறது. அங்கு ஏற்கெனவே குடோன் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் மேற்கூரையை சீரமைத்த பின்பு உடனடியாக அங்கு நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்துவிடலாம். இங்குள்ள மேலும் 2 கட்டிடங்களை அலுவலகப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினர்.
பாரதீய கிசான் சங்க தேனி மாவட்டத் தலைவர் எம்.சதீஷ்பாபு கூறுகையில், கடந்த காலங்களில் தனியார் இடத்தில் கொள்முதல் நிலையம் செயல்பட்டதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
எனவே பொதுப்பணித் துறையின் இடத்தில் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் அறுவடை தொடங்க உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் க.வீ.முரளீதரன் இப்பகுதியை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஒப்புதல் கிடைத்ததும் இந்த இடத்தில் விரைவில் கொள்முதல் நிலையம் தொடங்கப்படும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT