Published : 06 Oct 2022 11:34 PM
Last Updated : 06 Oct 2022 11:34 PM
கோவை: பெண்கள் ஆடை குறைப்பைத் தவிர்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கோவையில் நடந்த விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ‘21-ம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவிகளை தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு இன்று (அக்.06) மாலை நடந்தது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில், "பெண்கள் உயர்கல்வியை அடைவதில் உள்ள தடைகள் பற்றி கண்டறிய வேண்டும். பெண்களின் கல்விக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கழிவறை இல்லாததால் பள்ளிகளில் மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்க பள்ளிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதிகளை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.
திருமணம் உங்களை தடுத்து நிறுத்தாது. பெண்கள், தன்னால் முடியும் என நினைக்க வேண்டும். உங்களுக்குள் உள்ள திறமையை கண்டுபிடிக்க வேண்டும். செல்போன் கையில் இருந்தால் உலகத்தில் வேறு எதுவும் தேவையில்லை என்ற நிலை தற்போது உள்ளது. தொழில்நுட்பம் (டெக்னாலஜி) எந்த அளவுக்கு உங்களை உயர்த்துகிறதோ, அதே அளவுக்கு உங்களை கீழே தள்ளிவிடும்.
என்னையும் விமர்சித்தனர்
என்னை கருப்பு நிறம் என பலர் விமர்சித்தனர். விமர்சனங்களை உறுதியோடு தடுக்க வேண்டும். விமர்சனங்களால் உறுதியானவர்களை தடுக்க முடியாது என்பதை நான் நிரூபித்துக் காட்டியுள்ளேன். பெண்களுக்கு துணிச்சலும், என்னால் எதுவும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை அனைவரும் முழுமையாக படியுங்கள். அதை படிக்காமல் எதையும் கூற கூடாது. சிலர், அதில் மொழி திணிப்பு, குலக்கல்வி ஊக்குவிப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய கல்வி கொள்கையில் பாலின வேற்றுமை களையப்பட்டுள்ளது. பெண்களை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்துவது தான் தேசிய கல்வி கொள்கை. அதில், தாய்மொழி கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. பெண்களுக்கு அதிகளவிலான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது. பெண்கள் நூறு சதவீதம் கல்வி பெற வேண்டும் என்பதும், 50 சதவீதம் பெண்கள் உயர்கல்வி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என தேசிய கல்வி கொள்கை கூறுகிறது.
பெண்கள் சில கட்டுப்பாடுகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக ஆடை கட்டுப்பாடு அவசியம். பெண்கள் ஆடை குறைப்பை தவிர்த்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் கலாச்சாரம் தான் உலகில் சிறந்தது. சேலை கட்டுவதும் ஒரு மார்டன் ஸ்டைல் தான் என்பதை பெண்கள் உணர வேண்டும். நம் கலாச்சார ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலையை அளிக்கும் நபர்களாக மாற வேண்டும். பெண்கள் உயர்கல்வியில் பதக்கங்களை பெற்றாலும் ஆராய்ச்சி படிப்புகளில் ஆண்கள் ஆதிக்கம் தான் இருக்கிறது. இந்நிலையை மாற்ற வேண்டும். ஆராய்ச்சி மற்றும் தொழிற்சார்ந்த துறைகளை பெண்கள் தேர்வு செய்ய வேண்டும். பெண்கள் முன்னேற்றத்துக்கு குடும்பத்தினர் ஊக்கம் அளிக்க வேண்டும். தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர் டி.எஸ்.கே.மீனாட்சி சுந்தரம், வேந்தர் எஸ்.பி.தியாகராஜன், துணைவேந்தர் வி.பாரதி ஹரிசங்கர், பதிவாளர் கவுசல்யா ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT