Last Updated : 06 Oct, 2022 08:34 PM

2  

Published : 06 Oct 2022 08:34 PM
Last Updated : 06 Oct 2022 08:34 PM

மின்துறை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: புதுச்சேரி அதிமுக

முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன். (கோப்புப்படம்)

புதுச்சேரி: மின்துறை தனியார்மயம் தொடர்பான ஏலத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மின்துறை தனியார்மயமாக்கலின் அவசியம் என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதேபோன்று மின்துறை தனியார்மயம் தொடர்பான ஏலத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் தேவை.

வெளிப்படை தன்மை இல்லாததால் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவில் ஏலத்தில் ஊழல் நடைபெற்று வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் அவரவர் நிலைக்கு ஏற்ப பேசி வருகின்றனர். இது சம்பந்தமாக ஒரு முறையான விளக்கத்தை ஒரு வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்.

ரூ.27 கோடி தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். மின்துறையின் அசையும் சொத்துக்கள் மட்டும் தற்போது ஏலம் விடப்படுவதாக தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மின்துறைக்கு சொந்தமான அசையும் மின் தளவாட சொத்துக்கள் எவ்வளவு என்பதையும், இதை எந்த நிபுணர் குழு முடிவு செய்தது? என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அரசு, சுமார் ரூ.600 கோடி அளவில் மின்துறைக்கு அசையும் சொத்து இருப்பதாகக் கருதி, அதன் அடிப்படையில் குறைந்தபட்ச ஏல தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் மின்துறைக்கு சுமார் ரூ.1,500 கோடி-க்கு மேல் அசையும் சொத்துக்கள் உள்ளதாக தெரிகிறது. மின்துறைக்கு இருக்கக்கூடிய அனைத்து அசையும் தளவாடப் பொருட்களும் பொதுமக்களுக்கு சொந்தமானது. இதனை குறைவாக கணக்கு எடுத்துள்ளனர். இதில் முதல்வர் தலையிட்டு அசையும் சொத்துக்கள் எவ்வளவு உள்ளது என மறு ஆய்வுக்கு விட வேண்டும். அதுவரை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோவா, டையூ, டாமன், அந்தமான், டெல்லி போன்ற பல்வேறு யூனியன் பிரதேசங்களில் 51 சதவீதம் அரசின் கட்டுப்பாட்டிலும், 49 சதவீதம் மட்டுமே தனியாரிடமும் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஆனால் புதுச்சேரியில் மட்டும் 100 சதவீதமும் தனியாரிடம் வழங்க டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படும் எனில் புதுச்சேரியில் உள்ள சுமார் 3,85,000 மின் இணைப்புகளுக்கு ரூ.240 கோடி செலவில் ஸ்மார்ட் மீட்டர் புதிதாக பொருத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது தேவையற்ற ஒன்றாகும்.

இதற்கான நிதி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி நிதியில் இருந்து செலவு செய்யப்பட்டாலும் அதில் 3-ல் ஒரு பங்கான ரூ.80 கோடி மாநில அரசின் நிதி என்பதை அரசு உணர வேண்டும். தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் இந்த வாரத்திலேயே முதல்வர் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் என அனைவருக்கும் தீபாவளி போனசை அறிவித்து அடுத்த வாரத்திலேயே அந்த தொகையை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x