Published : 06 Oct 2022 03:27 PM
Last Updated : 06 Oct 2022 03:27 PM
சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முதல்வரின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கப் பெறுகிறது. இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதோடு, கனமழை முதல் அதி கன மழை பொழிவு ஏற்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவை விட 35 முதல் 75 விழுக்காடு கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 01.10.2022 முதல் 05.10.2022 முடிய தமிழ்நாட்டில் 5.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில சராசரி 3.25 மி.மீ. ஆகும்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் 26.09.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு, பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு துறைகள், முப்படை, பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் தலைமைச்செயலர் 13.09.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு, பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள கூடுதல் தலைமைச்செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் 03.10.2022 அன்று காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், மாவட்ட அளவில், பருவமழை காலத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண். இ.இ.1(4) / 558 / 2022 நாள்: 19.09.2022 வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
> வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, பொதுமக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
> மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
> 94458 69848 வாட்ஸ் அப் எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
> TNSMART செயலி மூலம் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.
> பொதுவான எச்சரிக்கை நடைமுறை வாயிலாக செல்பேசிகள் மூலம் பொது மக்களுக்கு புயல், கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
> 1,51,050 முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
> பேரிடர் தாக்கத்திற்கு உள்ளாகும் 16 மாவட்டங்களில், ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வர்களுக்கு தேடல், மீட்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
> தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் பேரிடர்களை சந்திக்க முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர்.
> மாநிலத்தில் மீட்புப் பணிகளுக்காக 90 ஹெலிக்காப்டர் இறங்குதளங்கள் தயார் நிலையில் உள்ளன.
> பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்காக 1 லட்சத்து 13 ஆயிரம் நபர்களை தங்க வைக்கக்கூடிய 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் 4,973 பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட கண்டறியப்பட்டுள்ளன.
> மீட்பு நடவடிக்கைகளுக்காக, 2,897 JCB இயந்திரங்களும், 2,115 ஜெனரேட்டர்களும், 483 நீர் இறைப்பான்களும், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 5,900 கட்டுமரங்களும், 48,100 மோட்டார் படகுகளும் மற்றும் 5,800 இயந்திர படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
> வெள்ளத் தடுப்புக்கென போதுமான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
> மின்கம்பங்கள், மின்கடத்தி மற்றும் மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன.
> மீனவர்களுக்கு, Satellite Phone, Navtex, Navic மூலம் பேரிடர் குறித்த தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
> நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாலங்கள், சிறுபாலங்களில் தூர் வாரவும் அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
> சென்னை பெருநகரத்தை பொறுத்தமட்டில், தற்போது நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை 15.10.2022-க்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளின் முன்னேற்றத்தை அனைத்து மண்டல கண்காணிப்பாளர்களும் (Zonal Monitoring Officers) பிரத்யேகமாக அக்கறையுடன் கண்காணித்து வருகிறார்கள்.
> மழைக்காலத்தில், பொது மக்களுக்கு தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பவுடர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
> கிடங்குகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது
> அனைத்து மாவட்ட தலைமை மருத்துமனைகளும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், போதுமான மருத்துவர்கள், செவிலயர்கள் மற்றும் மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன.
இந்த வகையில், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT