Published : 06 Oct 2022 02:37 PM
Last Updated : 06 Oct 2022 02:37 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பாஜக கூட்டணி அரசு கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் தமிழிசை, கல்வியமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கைப்படி புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் ஏன் விவாதிக்கவில்லை? ஏன் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்கவில்லை? ஆளுநருக்கு கொள்கையினை கொண்டு வர அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை.
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தேவையற்றது. இதனால் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள். வடமாநிலத்தவரை வேலைக்கு வைப்பார்கள். மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு வேலை என்பார்கள். புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் கீழுள்ள பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றுவதால் நமது மாநிலத்தின் கல்விக்கான அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்படும்.
மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணிநியமனம் போன்ற எல்லா உரிமைகளும் மத்திய அரசின் கைகளுக்கு போய்விடும் என்ற பெரும் அபாயம் உள்ளது என்பது தான் உண்மை நிலவரம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பை செய்வதோடு மட்டுமல்லாமல், நமது மாணவர்களின் தாய்மொழி வளத்தை சிதைப்பதோடு மட்டுமல்லாமல், மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு என அனைத்தையும் நேரடியாக சிதைக்கும் முயற்சி.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் தெரிந்த எவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் அமையும். வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும். உள்ளூர் பூர்வக்குடிகள் மாநிலத்தை விட்டு இடம் பெயரக் கூடிய அபாயம் ஏற்படும். தற்பொழுது அனைத்து துறைகளிலும் நம் பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகள் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். அதனால் புதுச்சேரி மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. மாநில பாடத்திட்டத்தைவிட சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான் சிறந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும், சான்றும் கிடையாது. அதனால் மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை இந்த பாஜக கூட்டணி அரசு கைவிட வேண்டும்" என்று சிவா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT