Published : 06 Oct 2022 07:14 AM
Last Updated : 06 Oct 2022 07:14 AM
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம் மன் திருக்கோயிலில் தசரா திருவிழா செப்.26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காப்பு கட்டிய பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். நுற்றுக்கணக்கான தசரா குழுவினர் கடந்த 10 நாட்களாக வீதிகள்தோறும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். கரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தசரா கலைநிகழ்ச்சிகள் தென் மாவட்டங்கள் முழுமைக்கும் களைகட்டியிருந்தன.
விழா நாட்களில் முத்தாரம்மன் கோயிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பக்தர்கள் குலசேகரன்பட்டினம் நோக்கி வரத்தொடங்கினர். நேற்று காலை 6 மற்றும் 8 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், 10.30 மணிக்கு மகாஅபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கடற்கரைக்கு வந்தார். அங்கு பல்வேறு வேடங்களில் வந்த மகிசாசூரனை வதம் செய்தார். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘தாயே, முத்தாரம்மா’ என முழக்கமிட்டனர்.
கடற்கரையில் உள்ள மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் அடுத்தடுத்து எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தசரா குழுவினர் விடிய விடிய கலைநிகழ்ச்சிகளை நடத்தியதால் குலசேகரன்பட்டினம் களைகட்டியிருந்தது. இன்று (6-ம் தேதி) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுகிறார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். தசரா விழா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அரசு சார்பில் குலசேக ரன்பட்டினத்தில் நேற்று பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட எஸ்பி எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 2,100 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ம.அன்புமணி, உதவி ஆணையர் தி.சங்கர், கோயில் செயல் ஆலுவலர் ரா.இராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT