Published : 04 Jul 2014 10:27 AM
Last Updated : 04 Jul 2014 10:27 AM
சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் கட்டிட விபத்துப் பகுதியில் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண அவர்கள் அணிந்திருந்த ஆடையைத் தவிர வேறு எந்த அடையாளமும் எங்களிடம் இல்லை என்றார் நெல்லூர் உதவி ஆட்சியர் ரேகா ரவி.
மீட்புப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த ரேகா கூறுகையில், "இடம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் அடையாள அட்டை என ஏதும் இல்லை. அவர்கள் சட்ட விதிமுறைப்படி தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது வேலை பார்க்க வந்த மாநிலத்திலோ பதிந்திருக்கவில்லை. இங்கு, இறந்தவர்கள் பெரும்பாலானோர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்" என்றார்.
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.ராமண்ணா. இடம்பெயர்ந்து வேலை செய்ய வந்துள்ள அவருக்கு தன்னைப் போன்ற தொழிலாளர்கள் தமிழக அரசிடம் விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கூட தெரியவில்லை. அவரது தற்போதைய எண்ணம் எல்லாம் ஆந்திர அரசிடம் இருந்து நிவாரணத் தொகை பெறுவதில் மட்டுமே இருக்கிறது.
மவுலிவாக்கம் கட்டிட விபத்தானது, தமிழ்நாடு தொழிலாளர் துறை இரண்டு அண்டுகளுக்கு முன்னர், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவரது குழந்தைகள் நலனுக்காக வகுத்த செயலாக்கத்திட்டம் இன்னும் அமல் படுத்தப்படாமல் இருப்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது.
இது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய அமைப்பைச் சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன் கூறுகையில், "இப்படிப்பட்ட தொழிலாளர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யும் அடிப்படை பணி இங்கு மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை" என்கிறார்.
தொழிலாளர் வாரியம் கூடுதல் ஆணையர் பி.கருப்பசாமி கூறுகையில், "சர்வ ஷிக்ச அபியான், கல்வி உரிமைச் சட்டம் 2009 போன்றவை இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வித் தேவையை பூர்த்தி செய்தாலும். தொழிலாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது"
யுனிசெப் அமைப்பின் வித்யாசாகர் கூறியதாவது, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் நலனுக்காக திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் முக்கியமானதே. மவுலிவாக்கம் சம்பவத்தை பொறுத்தவரை அன்றைய தினம் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே விட்டு வந்துள்ளனர் என கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பதிவேட்டை பராமரிக்க மாநில ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டாலும், மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அது வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் இல்லை என்றார் கருப்பசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT