Published : 24 Nov 2016 09:54 AM
Last Updated : 24 Nov 2016 09:54 AM

உள்ளாட்சி 48: ஹை-டெக் நிர்வாகத்தில் அசத்தும் கொழிஞ்சாம்பாறை கிராமம்!

கணினியில் பதியப்படும் மனுக்கள்... தொடுதிரை காட்டும் நடவடிக்கை... தலைவர், உறுப்பினர்களுக்கும் வருகைப் பதிவேடு!



காலை 10 மணி. வரவேற் பறையின் இருக்கை களில் மக்கள் அமர்ந்தி ருக்கிறார்கள். தொலைக்காட்சியில் செய்திகள் ஓடுகின்றன. அனைவருக் கும் தேநீர் அளிக்கப்படுகிறது. “டோக்கன் நம்பர் ஒன், ஷேம பென் சன்... அம்மே எனிட்டு வருவோ...” என்கிறது ஒலிபெருக்கி அறிவிப்பு. கூடவே டிஜிட்டல் திரையிலும் டோக்கன் எண் ஒளிர்கிறது. முதிய பெண்மணி ஒருவர் எழுந்துச் சென்று ‘கவுன்டரில்’ மனு கொடுக்கிறார். அதற்கு ரசீது தருகிறார்கள். நவீன தொடுதிரை இயந்திரத்தில் மக்கள் தங்களது விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையை அறிந்துகொள் கிறார்கள். வார்டு உறுப்பினர்களும் ஊழியர்களும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடுகிறார்கள். பரபரப்பாக இயங்குகிறது கொழிஞ் சாம்பாறை கிராமப் பஞ்சாயத்து அலுவலகம்.

அலுவலகத்துக்குள் நுழைகிறோம். தகவல் தொழில்நுட்பத் துறை அலுவல கத்துக்குள் நுழைந்த உணர்வு ஏற்படுகிறது. தனித்தனி கேபின்களில் கணினியில் மூழ்கியிருக்கிறார்கள் ஊழியர்கள். நிர்வாகம் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டிருக்கிறது. ‘பவர் பாயின்ட்’ திரையிடல் வசதி யுடன் குளிரூட்டப்பட்ட நவீனக் கூடத்தில் நடக்கிறது கிராம சபைக் கூட்டம். நம்மை வரவேற்று அமர வைத்தார்கள் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.பபிதா, மக்கள் நலக்குழுத் தலைவர் விஜயானந்த் மற்றும் உறுப்பினர்கள்.

“பாலக்காட்டு ஜில்லாவில் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றது எங்கள் கிராமப் பஞ்சாயத்து. மொத்தம் 18 வார்டுகள். அதில் 12 உறுப்பினர்கள் பெண்கள். எங்கள் பஞ்சாயத்தில் 4,500 பேர் முதியோர் ஓய்வூதியம், விவசாயத் தொழிலாளர் ஓய்வூதியம், தொழிலாளர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, கணவரை இழந்தோர் உதவித் தொகை, திருமணமாகாத பெண் களுக்கான உதவித் தொகை (30 வயதைக் கடந்த திருமணம் ஆகாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது) வழங்குகிறோம். மாநில அரசின் திட்டங்கள்தான். ஆனால், நிதி ஒதுக் குவது மட்டுமே மாநில அரசின் பணி. பயனாளிகளைத் தேர்வு செய்வது, பெயர் சேர்த்தல், நீக்குதல், நிதி விநியோகம் அனைத்தும் பஞ்சாயத்து பார்த்துக்கொள்ளும்.

இதுதவிர, ஒரு மாநில அரசைப் போலவே நாங்களே சொந்த நிதியில் இருந்தும் உதவி திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். இது கிராம சபை மூலம் முடிவெடுக்கப்படுகிறது. அந்த வகையில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவரில் பட்டம் பெறும் இளைஞர்கள் அனைவருக்கும் மடிக் கணினி தருகிறோம். 8, 9-வது வகுப்பு படிக்கும் அனைத்து பழங் குடியின மாணவர்களுக்கும் மிதி வண்டி வழங்குகிறோம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவதற்காக நான்கு தவணைகளில் ரூ.3 லட்சம் அளிக்கப்படுகிறது. வீடு கட்ட 90 நாட்களுக்கான கட்டுமான தொழிலாளர்களின் கூலியைப் பஞ்சாயத்து அளிக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் வீடு பழுது நீக்க ரூ.50 ஆயிரமும், பொதுப் பிரிவினருக்கு ரூ. 25 ஆயிரமும் நிதி அளிக்கிறோம். விவசாயிகளுக்கு இலவசமாக கிணறு தூர் வாரித்தருகி றோம். நலிவடைந்த விவசாயிக ளுக்கு தென்னை, மா, வாழை வளர்க்க குழி தோண்டித் தருகிறோம். இத்திட்டங்கள் நாங்கள் உரு வாக்கியவை. எங்கள் பஞ்சாயத்தின் சொந்த வரி வருவாயில் இருந்து இதனைச் செயல்படுத்துகிறோம்.

தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசின் பங்களிப்புடன் ‘கேர கிராமம்’ திட்டத்தை செயல்படுத்தித் தருகிறோம். ஒரு தென்னை மரத் துக்கு உரம், குழி வெட்ட, தேங்காய்ப் பறிக்க கூலி ஆகிய வற்றுக்கு ரூ.200 தருகிறோம். தேங்காயைப் பஞ்சாயத்தே கொள் முதல் செய்துகொள்ளும். நெல் பயிரிடுபவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை அளிக்கிறோம். காய்கறி விவசாயி களுக்கு விதை மானியம், இயற்கை உரம் உண்டு. சொட்டு நீர்ப் பாசனத் துக்கு 25 சதவிகிதம் பஞ்சாயத்தில் இருந்து மானியம் வழங்குகிறோம். இயற்கை விவசாயம் செய்பவர்க ளுக்கு விதைகள், நாற்றுகள் இல வசம். இயற்கை விவசாயத்துக்காக இலவச முகாம்கள் நடத்துகிறோம்.

மேற்கண்ட சேவைகள் அனைத்தும் முழுமையாக கணினி மயமாக்கியிருக்கிறோம். பஞ்சாயத் துத் தலைவர் உட்பட வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தினசரி பஞ்சாயத்து அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட வேண்டும். அவர்களின் வருகை குறித்த விவரம் முகப்பில் இருக்கும் அறிவிப்பு பலகையிலும் எழுதப்பட்டிருக்கும். வார்டு உறுப் பினர்கள் ஒவ்வொருவரும் தங்க ளுக்கான ‘ஹெல்ப் டெஸ்க்’ பகுதியில் அமர்ந்து, தங்கள் பகுதியில் இருந்து வருபவர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து தர வேண்டும். சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். காலை 10 முதல் 12 வரை இந்த வேலை கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

கொழிஞ்சாம்பாறை கிராமப் பஞ்சாயத்து அலுவலக முகப்பில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப் பங்களைப் பஞ்சாயத்தில் அளித்தால் ரசீது அளிக்கப்படும். மனுக்கள் அனைத்தும் கணனியில் பதியப்படும். ரசீதில் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற விவரங்கள் இருக்கும். பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், வருமானச் சான்று, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட உறுப்பினர் அட்டை இவை அனைத் தும் அதிகபட்சம் ஐந்து அலுவலக நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும். உறுப்பினர் அட்டை, தொழில் உரிமம் போன்ற சில சான்றுகளைக் கையோடு வாங்கிக் கொள்ளலாம். மனுக்களின் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த மனுக்களை கணினியில் பதிய முடியாதபடி மென்பொருள் பொருத்தியிருக்கிறோம். எனவே, நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப் படுகிறது. புகார்களும் கணினியில் பதியப்படுகின்றன. புகார்களைக் கவனிக்க மனித வளப் பிரிவு இருக் கிறது. மனுக்கள், புகார்கள் மீதான நடவடிக்கைகளை மக்கள் தொடு திரை சாதனம் மூலம் தெரிந்து கொள்ளலாம்…” என்கிறார்.

“சரி, இத்தனையையும் செய்ய ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு வருவாய் ஏது?” என்றோம்.

“வரி வருவாய் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துகிறோம். இதற்கு தனியாகக் குழு இருக்கிறது. கொழிஞ் சாம்பாறை கிராமப் பஞ்சாயத்தில் ஒருவர் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. தள்ளுவண்டி கடை தொடங்கி தனியார் கல்லூரிகள் வரை கறாராக வரி விதிக்கிறோம். வெளிப்படையான மற்றும் கணினி முறையிலான வரி விதிப்பு நிர்வாகம் நடக்கிறது. வரியைக் குறைத்துப்போடுவது, மாற்றிப் போடுவது போன்ற தவறுகளுக்கு இடமில்லை. ஒவ்வொரு மாதமும் பில்லிங் மெஷினுடன் பஞ்சாயத்து பில் கலெக்டர்கள் வரி வசூலிக்கிறார்கள். வரி செலுத்தவில்லை எனில் ஏழு நாட்கள் அவகாசம் அளித்து பாரபட்சம் இல்லாமல் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறோம். வரி வசூலில் இவ்வாறு கண்டிப்புடன் செயல்பட்டால்தான் நிர்வாகத்தைத் திறம்பட நடத்த இயலும்.

அதே சமயம், எங்கள் பஞ்சாயத்தில் இதுநாள் வரை மாதம் ரூ.100-ஆக வசூலிக்கப்பட்டு வந்த குடிநீர் வரியை இந்த மாதம் முதல் ரூ.70-ஆக குறைத்திருக்கிறோம். சமீபத்தில் வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்ய ஆய்வு மேற்கொண்டபோது ஒரு வீட்டுக்குக் குடிநீர் விநியோகிக்க ரூ.60 மட்டுமே செலவு ஆகிறது என்பது தெரியவந்தது. அதனால், ரூ.10 மட்டும் வரி வருவாய் சேர்த்துள்ளோம்” என்றார்கள்.

- பயணம் தொடரும்... | படங்கள்: மு.லட்சுமி அருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x