Published : 05 Oct 2022 04:13 PM
Last Updated : 05 Oct 2022 04:13 PM
சென்னை: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ.4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டுத் திடல்கள் அமைக்க சென்னை மாநகராட்சி பணி ஆணை வழங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி, பூங்காத் துறையின் சார்பில் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரங்கத் துறையின்கீழ் 220 விளையாட்டுத் திடல்கள், 173 உடற்பயிற்சிக் கூடங்கள், 204 குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2022-23-ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் புதிய பூங்காக்கள் மற்றும் புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனடிப்படையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் புதிய பூங்கா அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ. 16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ. 4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டுத் திடல்கள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புதியதாக அமைக்கப்படவுள்ள பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச் சுவர், சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பாரம்பரிய மரக்கன்றுகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT