Published : 05 Oct 2022 03:54 PM
Last Updated : 05 Oct 2022 03:54 PM
காரைக்கால்: “தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் அலர்ஜியாக இருக்கிறது” என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காரைக்காலில் உள்ள ஒருங்கிணந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1 மற்றும் 2 ஆகிய நீதிமன்றங்கள் திறப்பு விழா இன்று (அக்.5) நடைபெற்றது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று நீதிமன்றங்களை திறந்து வைத்து, வழக்கு விசாரணை நடவடிக்கைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது: “உலகத்தில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
நடுநிலை தவறாத தராசைப் போல நீதித்துறை இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார். இன்று உலகம் முழுவதும் நீதித்துறைக்கு இருக்கும் சின்னம் துலாக்கோல் தான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீதி வழுவாமல் இருக்கும் துலாக்கோல் போல் நீதித்துறை இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டி இருக்கிறார் என்பது சிறப்பு. மனு நீதிச் சோழனை போல் நீதி வழங்கிய மன்னர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது.
எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனைகள் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது. அதே போல நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும். நான் தற்போதுதான் முதல் முறையாக நீதிமன்றத்துக்குள் வருகிறேன்.
தெலங்கானாவில் விஜயதசமி விழா நம்மைவிட மாறுபட்ட முறையில் சிறப்பாக கொண்டாடுவார்கள். சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளவுள்ளதால் உடனடியாகச் செல்கிறேன். எனக்கு பழக்கமில்லையென்றாலும், மாநில மக்களுக்கு பழக்கமும், நம்பிக்கையும் இருப்பதால், அதை மதிக்க வேண்டியது எனது கடமை. அரசின் தலைமையில் இருப்பவர்கள், தமக்கு விருப்பமில்லை என்றாலும் அந்த மாநில மக்கள் கொண்டாடுவதை மதிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு" தமிழிசை கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியது: "நீதிமன்றங்களுக்குத் தேவையான வசதியை புதுச்சேரி அரசு செய்து வருகிறது. மக்கள் எண்ணங்களின்படி வழக்குகளை விரைவாக முடிக்க வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி தொடங்குவதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்கும் என நம்புகிறேன். நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா பேசும்போது, “ஜாமீன், தடையாணை வாங்குவது போன்ற நடவடிக்கைகளுக்காக மட்டுமே நீதிமன்றங்கள் என்ற ஒரு பார்வை உள்ளது. ஒரு மனிதனின், ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வகையில் செயல்படுபவை நீதிமன்றங்கள். கரோனா பாதிப்பு சூழலுக்குப் பிறகு வீடியோ கான்பிரஸிங், லைவ் ஸ்ட்ரீமிங், இ.ஃபைலிங் என்ற புதுவிதமான முறைகள் நீதிமன்றங்களில் வரவுள்ளன. அதற்கேற்ப வழக்கறிஞர்கள் தம்மை தயார் செய்துகொள்ள வேண்டும்" என்றார்.
இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புதுச்சேரி தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன், காரைக்கால் மாவட்ட நீதிபதி கே.அல்லி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், சட்ட அமைச்சர் கே.லட்சுமி நாராயணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT