Published : 05 Oct 2022 03:26 PM
Last Updated : 05 Oct 2022 03:26 PM

‘வள்ளலார் - 200’ இலச்சினை, தபால் உறை வெளியீடு; ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வள்ளலார் தபால் உறையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'வள்ளலார் - 200' இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை இன்று (அக்.5) வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: "சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.5) வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 5.10.1823 அன்று சிதம்பரம் அருகில் மருதூரில் பிறந்தார். ஆன்மிகவாதியான வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நிறுவினார். கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக வடலூரில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். சமத்துவம், கல்வி, தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். திருவருட்பா, ஜீவகாருண்யம், அருள்நெறி போன்ற பல ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பில், "உயிர்த்திரள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (5.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது ஆண்டும் (5.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்தப்படும் இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்மசாலை தொடங்கிய 156-வது ஆண்டு கொண்டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் வள்ளலார் முப்பெரும் விழாவினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்து, "வள்ளலார் தனிப்பெருங்கருணைட சிறப்பு மலரை வெளியிட்டு, சுத்த சன்மார்க்க அன்பர்கள் மழையூர் சதாசிவம், சா.மு. சிவராமன், தனலட்சுமி, எம். பாலகிருஷ்ணன், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, வள்ளலார் முப்பெரும் விழாவில், வள்ளலாரின் "தனிபெருங்கருணை நாள்" முன்னிட்டு 5.10.2022 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுத் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், உறுப்பினர்கள் சாரதா நம்பி ஆரூரன், அருள்நந்தி சிவம், கே.என். உமாபதி, உமாபதி, தேசமங்கையர்க்கரசி, மெய்யப்பன், முனைவர் உலகநாயகி, டாக்டர் சக்திவேல் முருகனார், ஏ.பி.ஜெ. அருள் (எ) என். இளங்கோ, ஜி. சந்திரகாசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் இந்திய அஞ்சல்துறையின் தென் சென்னை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் டி. திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x