Published : 05 Oct 2022 12:44 PM
Last Updated : 05 Oct 2022 12:44 PM

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைத்தது 'இந்து' என்ற சொல்தானே? - திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி பதில்

கோப்புப்படம்

சென்னை: "இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை. இந்தியா என்கிற இந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள்தான் என்றே நாம் சொல்கிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தலைவர் திருமாவளவனுக்கு ட்விட்டரில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செயகின்றனர். இந்நிலையில், 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன் என்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

இதைத்தானே நாமும் சொல்லி வருகிறோம். இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை என்று. இந்தியா என்கிற இந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள் தான் என்றே நாம் சொல்கிறோம். நீங்கள் சொல்வது போல் சைவமும், வைணவமும் மோதிக்கொண்டாதாகவே இருக்கட்டும். அந்த மோதலை தடுத்து, இணைத்தது இந்து என்ற சொல் தானே? தவறா? ஏன் மோத வேண்டுமா? குருதிச்சேற்றில் தலைகள் உருண்டதாகவே வைத்து கொள்வோம். அதை தடுத்து, சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்தது 'இந்து' என்ற சொல் தானே? ஏன் அடித்து கொண்டு சாக வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா?

மாறிமாறி மதமாற்றம் செய்தது தவறு என்கிறீர்களா? அப்படியானால் தற்போது நடைபெறும் மதமாற்றங்களுக்கு ஆதரவளிப்பது ஏன்? கிறிஸ்துவர்களின் மதமாற்றங்களை கண்டிக்கிறேன் என்று சொல்ல துணிவிருக்கிறதா? ஆங்கிலேயன் எழுதிய மனுதர்ம நூல் என்ற பொய்யான 'மனுஸ்ம்ரிதியை' படித்து இன்றைய இந்துக்களிடம் அன்றைய அடையாளத்தை திணிப்பது ஏன்? இது வரலாற்று மோசடியில்லையா? ஆக, மதமாற்றங்கள் நடைபெற வேண்டும். அதனால் மக்கள் வெளிப்படையாக மோதிக்கொண்டு அடித்து கொள்ள வேண்டும். குருதிச்சேற்றில் தலைகள் உருள வேண்டும்.

அதனால்தான் பல மதங்களை ஒன்றிணைத்திருக்கிற இந்து என்று சொல்லப்படுகிற மதத்தை எதிர்க்கிறீர்கள்? அப்படித்தானே திருமாவளவன் அவர்களே? மீண்டும் சொல்கிறேன். இந்து என்பது ஒரு மதமல்ல. வாழ்க்கை முறை. மண்ணையும், கல்லையும், புல்லையும், மரத்தையும், கண்ணுக்கு தெரியாததையும், மனதிற்கு பிடித்ததையும் வழிபடும் நம்பிக்கையின் அடிப்படையே அழிவில்லாத, நிலையான 'சனாதனதர்மம்' என்ற இன்றைய அமைதியான, உண்மையான தர்மத்தை, நெறியை போதிக்கின்ற இந்து தர்மம் என்கிற கலாசாரம். தேவையில்லாததை படித்து குழம்பி போயுள்ளீர்கள் திருமாவளவன் அவர்களே, தெளிவு பெறுங்கள். வெறுப்பு அரசியலை கை விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர். இந்நிலையில், 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x