Published : 03 Jul 2014 08:18 AM
Last Updated : 03 Jul 2014 08:18 AM

மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ஏழை எளிய மக்களை பாதிப்பதாக இருக்கக் கூடாது: அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பொருளாதார மாற்றங்களையும், நிதி நிர்வாக சீர்திருத்த நடவடிக் கைகளையும் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கும் மத்திய அரசு, எக்காரணத்தைக் கொண்டும் ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் முடிவுகளை எடுக்கக் கூடாது என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக தலைமை செயற்குழுக் கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

முதலில் பல்வேறு சம்பவங் களில் உயிரிழந்த அதிமுக தொண் டர்கள், நிர்வாகிகள் 137 பேர், தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்டோரின் மறைவுக்கும், மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அதிமுகவுக்கு பெற்றுத் தந்த முதல்வர் ஜெயலலி தாவுக்கு பாராட்டும் மகத்தான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கும், வெற்றிக் காக பாடுபட்ட கட்சியினருக்கும் நன்றியும் தெரிவிக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் அதிமுக ஆட்சி மூன்றாண்டு நிறைவு செய்ததற்கும் நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்கும் செயற்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது என்றும், காலியாகிவிட்ட கரு வூலத்தையே தங்கள் கைகளில் பெற்றிருப்பதாகவும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசு மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக் கைகளும், ‘கசப்பு மருந்து’ என்று பிரதமர் சித்தரிக்கும் நடவடிக்கைகளும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு மேலும் சுமையையும் பாதிப்பையும் தருவதாக அமைந்துவிடக் கூடாது. மாறாக, புதிய பொருளாதார சவால்களை சந்திப்பதற்கு அந்த மக்களுக்கு உதவும் வகையில்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தமிழகத்துக்கு சாதகமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுத் தந்து, அதை நடைமுறைப்படுத்தும் வகையில் கண்காணிப்புக் குழுவை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு பாராட்டையும், கண்காணிப்புக் குழு அமைக்க ஆவன செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும் செயற்குழு தெரிவிக்கிறது.

அம்மா உணவகத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியது, ‘அம்மா உப்பு’ திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தது, தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக ஆக்கியது உள்ளிட்ட சாதனைகளுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகி கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x