Published : 04 Oct 2022 05:58 PM
Last Updated : 04 Oct 2022 05:58 PM
சென்னை: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், திருவலம் ஆரம்ப சுகாதார நிலையம், காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனை கட்டும் பணி, பள்ளிகுப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சேனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கழிஞ்சூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய 10 மருத்துவமனைகளில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விரிவாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "பொன்னை ஒரு பெரிய ஊராட்சி. இவற்றை சுற்றி 20 கிராமங்கள் உள்ளன. ஆகவே, பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை நம்பித்தான் அனைத்து பொதுமக்களும் உள்ளனர். எனவே, இது போன்ற மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காகவும், தரம் உயர்த்துவதற்காகவும், அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சரும், நானும் இன்று விரிவாக ஆய்வு மேற்கொண்டோம்" என்றார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இராணிபேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இன்று காலை லாலாப்பேட்டை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தோம். அதனைத்தொடர்ந்து பொன்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து இங்கு மருத்துவ அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகிய பணியிடங்களில் பணிபுரிபவரை மாற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருந்தாளுநரை வேறு இடத்திலிருந்து மாற்றுப் பணியில் இங்கு பணி செய்ய உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து உடனடியாக இங்கு நிரந்தரமான மருந்தாளுநரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜிட்டல் எக்ஸ்ரே, பல் மருத்துவத்திற்கு தேவையான ஒரு மருத்துவர் போன்ற நியமனங்களை உடனடியாக அமைத்து தகுதி வாய்ந்த மருத்துவமனையாக பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும். பொன்னை மருத்துவமனையில் பாழடைந்துள்ள கட்டிடங்களை இடித்து விட்டு வரும் நிதியாண்டில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகளை தயாரித்து அரசுக்கு அனுப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT