Published : 04 Oct 2022 05:32 PM
Last Updated : 04 Oct 2022 05:32 PM
சென்னை: ஊழியர்கள் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை அக்டோபர் 10-ம் தேதி வரை தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், ஃபாஸ்டாக் தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இரண்டு சுங்கச்சாவடிகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பரப்பளவில் 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி சரவணன் இன்று காணொலி காட்சி வாயிலாக விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில், "போராட்டம் காரணமாக சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில், "உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "ஊழியர்கள் அமைதியான முறையில் போரட்டத்தை நடத்தலாம். வாகன போக்குவரத்துக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. மேலும் பாதுகாப்பு அளிப்பதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT