Published : 04 Oct 2022 04:25 PM
Last Updated : 04 Oct 2022 04:25 PM
சென்னை: மியான்மரில் சிக்கிக்கொண்டிருக்கும் பிற தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி: "மத்திய அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக மியான்மரில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களில் 13 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மியான்மரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டெடுத்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் மியான்மரில் சிக்கிக்கொண்டிருப்பது குறித்த தகவல் அறிந்த உடனே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
மேலும் செப்.21-ம் தேதியன்று, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களும் விரைவில் தாயகம் திரும்புவர்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT