Published : 04 Oct 2022 12:29 PM
Last Updated : 04 Oct 2022 12:29 PM

இலங்கை போர்க்குற்ற விசாரணை | ஐ.நாவில் இந்தியா ஆதரிக்க வேண்டும்: அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

சென்னை: இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் நமது நாடு ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்துள்ளன. ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான இந்த வரைவுத் தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51-ஆவது கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளும், உறுப்பினர் அல்லாத 16 நாடுகளும் இணைந்து வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இலங்கையில் சமாதானம், மனித உரிமைகள், பொறுப்புடைமை ஆகியவற்றை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்தில் மொத்தம் 19 அம்சங்கள் இடங்கள் பெற்றுள்ளன. முதல் இரு பத்திகளில் போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள வரைவு தீர்மானம், அடுத்த 5 பத்திகளில் போர்க்குற்ற விசாரணை குறித்த இலங்கையின் நிலையை விமர்சித்துள்ளது.

மீதமுள்ள 12 பத்திகளில் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுத்து செல்வது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ள ஆதாரங்களை பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்; இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் குறித்து, இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளில் உரிய அதிகார வரம்பு கொண்ட அமைப்பால் நீதித்துறை விசாரணை மற்றும் பிற நடைமுறைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கு இது உதவும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள 53, 54, 55, 57- ஆவது கூட்டத் தொடர்களில் இலங்கையின் நிலைமை குறித்து மீண்டும் விவாதிப்பதற்கு இந்த தீர்மானம் வகை செய்துள்ளது. இதன் மூலம் பன்னாட்டளவில் மீண்டும் மீண்டும் இலங்கை கண்காணிப்புக்கும் கேள்விக்கும் உள்ளாக்கப்படும். இது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் வலுவடைவதற்கு நிச்சயம் உதவும்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்ப முடியாது என்ற நிலை உருவாகும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு நாட்டின் நீதிமன்றத்தில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய திட்டம் வகுத்து செயல்படுத்திய கொடுங்கோலர்கள் தண்டிக்கப்படுவதையும் இந்தத் தீர்மானம் உறுதி செய்யும். மத்திய அரசு விரும்பினால் இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவிலேயே கூட நடத்த முடியும்.

இத்தகைய சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கொடூர படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் குடும்பங்களுக்கு 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது மனித உரிமையில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் வலியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. இதற்கு முடிவு கட்டி போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கைகளை இந்திய அரசு ஆதரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் நடப்புக் கூட்டத்தில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி உரையாற்றிய இந்திய தூதர், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படாததை சுட்டிக்காட்டியதுடன், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு; இதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தியாவின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையில் குரல் கொடுத்த இந்தியா, ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையில் நாளை மறுநாள் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x