Published : 04 Oct 2022 12:11 PM
Last Updated : 04 Oct 2022 12:11 PM
சென்னை: சுங்கச் சாவடி ஊழியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் - செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், திடீரென 58 ஊழியர்களை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்துள்ளனர். தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிய வழக்கு, புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையரிடம் நிலுவையில் உள்ளது.
பணியாளர்களின் பணி நிலையில் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படக்கூடாது என்று தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை மீறி அரசிடம் முன் அனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி நிர்வாகம் பணிநீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பணி நீக்கத்தைக் கண்டித்து, தொழிலாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோதமான செயலாகும்.
பதிமூன்று ஆண்டு காலம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் அளிக்காமல், சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் 58 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்திருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT