Published : 04 Oct 2022 06:20 AM
Last Updated : 04 Oct 2022 06:20 AM

ஆயுதபூஜை பண்டிகை | உற்சாகமாக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்: ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் தென் மாவட்ட பயணிகள் கடும் அவதி

சென்னை: தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியது. தலைநகர் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் தென் மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். கடந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றன. பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் வசித்து வரும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் உரிய ஏற்பாடுகள் செய்திருந்தாலும், அதன் வசம் போதுமான ஏசி மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகள் இல்லை. பலர் தனியார் ஆம்னி பேருந்துகள், ரயில்களில் செல்ல விரும்புகின்றனர். ரயில்களில் இடம் கிடைப்பதில்லை என்பதால் ஆம்னி பேருந்துகளே தேர்வாக உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சில, அதிக அளவில் கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.3,877 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டிமாண்ட் அதிகரித்ததால் ஒரு இடத்துக்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அ.அன்பழகனிடம் கேட்டபோது, காலத்துக்கு ஏற்ப பணியாளர் ஊதியம், டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, டோல்கேட் கட்டணம் போன்றவை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதற்கு ஏற்றவாறு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால் 044 42870117 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.பணத்தை செலுத்தியதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் திரும்பப் பெற்றுத்தரப்படும் என்றார். அதிக கட்டணம் கொடுக்க இயலாத நடுத்தர குடும்பங்கள், ரயிலில் பிரீமியம் தத்கால் முறையில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதில் வழக்கமான டிக்கெட் விலையை விட பன்மடங்கு உயர்வாக உள்ளது. அதனால் அவர்களின் அடுத்த தேர்வாக அரசுப் போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அவர்கள் முன்பதிவு மூலம் இடம் பிடித்துக்கொள்வதால் கடை நிலையில் இருப்பவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியவில்லை. அவர்கள் பேருந்து நிலையங்களில் கூட்டத்தோடு கூட்டமாக அலைமோத வேண்டியுள்ளது.

தயார் நிலையில் பேருந்துகள்

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 2,835 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் 5,679 பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 3 லட்சத்து 12,345 பேர் பயணித்துள்ளனர். தற்போது பயணிப்போர் குறைவாக இருப்பதால் தேவையான பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. முன்பதிவுக்கு ஏற்பவும், பேருந்து நிலையத்தில் உள்ள கூட்டத்துக்கு ஏற்பவும் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறோம். பேருந்து கிடைக்காமல் அவதிப்படும் நிலை இதுவரை ஏற்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x