Published : 04 Oct 2022 07:23 AM
Last Updated : 04 Oct 2022 07:23 AM
சென்னை: மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் 2,213 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும், அவர்களால் அதை பயன்படுத்த முடிகிறதா என்பது கேள்விக் குறி. உதாரணத்துக்கு, நகரப் பேருந்துகளில் இலவச பயணம், அனைத்து பேருந்துகளிலும் 25 சதவீத கட்டணம், இருக்கை ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், மாற்றுத் திறனாளிகளால் அந்த சலுகையை பயன்படுத்த முடிவதில்லை. சமூகத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும், வீட்டில் இருந்து வெளியே வந்தால்தான் அந்த வாய்ப்புகளை அவர்கள் பெற முடியும். மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரை, வீட்டைவிட்டு வெளியே வருவதே அவர்களுக்கு சவாலாக உள்ளது. இந்த சூழலில், அனைவரும் அணுகும் வகையிலான பேருந்துகள் அவசியம் என்கிறார் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் கூட்டணியின் உறுப்பினர்ஆர்.சதீஷ்குமார்.
அவர் மேலும் கூறியதாவது: பேருந்தில் கைத்தடி வைக்க இடம், பிடித்து ஏறுவதற்கு கைப்பிடி உள்ளிட்டவை இருந்தாலே, அது மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் கொண்ட பேருந்து என்று அரசு வகைப்படுத்துகிறது. இது எப்படி மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்தாக இருக்க முடியும். மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகள் கேட்டால், சாலையில் வேகத்தடை இடையூறாக இருப்பதாக கூறுகின்றனர். பிரதான சாலைகளில் வேகத்தடையே கிடையாது. அப்படி இருந்தாலும், வேகத்தடைக்கான விதிகளை பின்பற்றி அதை அமைக்காதது யார் தவறு.
ஒரு மாற்றுத் திறனாளியாக எனக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை போக்குவரத்து செலவாகிறது. அனைவரும் பயன்படுத்தும் வகையில் அரசு பேருந்துகள் இருந்தால் இந்த செலவு ரூ.3
ஆயிரமாக குறையும். மெட்ரோ ரயிலில் சில சிக்கல்கள் இருந்தாலும், யார் துணையும் இன்றி என்னால் அதில் சென்று வர முடியும். அதுபோல, அனைத்து பொதுபோக்குவரத்து வாகனங்களிலும் மாற்றுத் திறனாளிகள் தனியாக வந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றை பெற வேண்டுமானால், அடுத்தவர்களின் உதவியின்றி, அவர்கள் தனியாக வீட்டைவிட்டு எளிதில் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பொது போக்குவரத்து வாகனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பயண வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக, பேருந்துகள் கொள்முதலுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.
இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இனி அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாகவே வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 500 பேட்டரி பேருந்துகள், 442 டீசல் பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து கொள்முதல் செய்யப்படும் 2,213 பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இருக்கும். அதில் சாய்தள வசதி இருக்கும் என்பதால், முதியோர், கர்ப்பிணிகள், சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவோர், பார்வையற்ற, கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தாழ்தள பேருந்துகளை இயக்கும்பட்சத்தில் வேகத்தடை உயரம், சாலை தரம் போன்றவை பிரச்சினையாக உள்ளன. இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு போக்குவரத்து கழகங்களில் காலாவதியான, பழுதான பேருந்துகள் கணிசமாக இருப்பதால், புதிய பேருந்துகளை கட்டாயம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அதிக அளவிலான பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருப்பது, அவர்களது போக்குவரத்து தேவையை வெகுவாகப் பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT