Last Updated : 01 Nov, 2016 08:14 AM

 

Published : 01 Nov 2016 08:14 AM
Last Updated : 01 Nov 2016 08:14 AM

‘ஒரு உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமை கிடையாது’ - ‘நன்றி’க்கு வந்த சோதனை: கேரளாவில் இந்த வேதனை

பழைய திரைப்படப் பாடல் ஒன்றில், ‘நன்றிகெட்ட மகனைவிட, நாய்கள் மேலடா…’ என்ற வரிகள் இடம்பெறும். அந்த அளவுக்கு நன்றிக்கு இலக்கணமாக விளங் கும் நாய்களுக்கு கேரளாவில் சோதனை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுக்க நன்றிக்கும், விசுவாசத்துக்கும் உதாரணமாக போற்றப்படும் நாய் இனம், நமது அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் கொலைகார மிருகமாக பார்க்கப்பட்டு, அதிகமான நாய் களைக் கொன்றால் தங்கக்காசு பரிசு என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. கடந்த 4 மாதங்களில் 175 குழந்தைகள் உட்பட 701 பேர் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர், இதில் 90 வயது முதியவர் உட்பட 10 பேர் உயிரிழந்துவிட்டனர் என்கிறது கேரள அரசு. அதனால் மக்களைக் காக்க நாய்களைக் கொல்லப் போகிறோம் என்று அறி வித்து, இதுவரை 100-க்கும் மேற் பட்ட நாய்களைக் கொன்று குவித் துள்ளனர்.

புழு, பூச்சி, ஈ, எறும்பு, புலி, சிங்கம், பறவைகள் என அனைத்து உயிரினங்களுக்கும் சம உரிமை உள்ள இந்த பூமியில் மற்ற உயி ரினங்களை அழித்து மனித இனம் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதை ‘ஸ்பீசிசிசம் (speciesism)’ என்கிறார்கள். வளர்ந்த, முதிர்ந்த நாகரீகம் அடைந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத இந்த நடை முறையை தற்போது கேரள அரசு பின்பற்றி வருகிறது. ‘‘பிரகத ஜாதக கணிப்பின்படி, செவ்வாய் மற்றும் சுக்கிரன் கிரகங்களின் போக்கைப் பொறுத்து, மனிதர்களுக்கு அஹிம்சை குணங்கள் மாறி, ஹிம்சை குணங்கள் தலைதூக்கும். பிற உயிரினங்களிடம் அன்பு காட்டும் குணத்தை மறந்து, நாம் வாழ பிறரை அழிக்கலாம் என்ற சிந்தனை ஓங்கும்’’ என்கிறார் நம்மிடம் பேசிய பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

மனிதர்களைக் கடிக்கும் நாயைக் கொல்வதுதான் தீர்வா? என்றால், ‘‘இல்லவே இல்லை’’ என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர். ‘தி இந்து’-வுக்காக அவரிடம் பேசிய போது, ‘‘இந்த உலகில் ஒரு உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. கேரளாவில் 2 லட்சத்து 70 ஆயிரம் நாய்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் எல்லா நாய்களும் மனிதர் களைக் கடிப்பதில்லை. ‘ரேபீஸ்’ வைரஸ் தொற்று ஏற்படும் நாய்கள் தனித்து விடப்படும். நோய்த் தொற்று மூளையைப் பாதிக்கும் போது மற்ற நாய்களுடன் சண்டை யிடும், மனிதர்களைக் கடிக்கும், அதன்மூலம் நோய் பரவும். அத் தகைய நாய்களை அடையாளம் கண்டு அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். அவற்றிற்கு ‘ஏபிசி’ எனப்படும் இனவிருத்தியை கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சை அளிப்பதன் மூலம் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். அதைவிடுத்து, நாய் களைக் கொல்வது எந்த வகையி லும் தீர்வாகாது’’ என்கிறார் திலகர்.

அதிகப்படியாக உள்ள நாய் களைப் பிடித்து காட்டில் கொண்டு போய் விடுவது சாத்தியமா என்று கேட்டபோது, ‘‘அது காட்டில் உள்ள சிறு உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடும். காட்டின் உயிர் சமநிலையைப் பாதிக்கும்’’ என்று பதிலளித்தார்.

‘‘நாய்களுக்கு இனவிருத்தியை தடுக்கும் அறுவை சிகிச்சை மேற் கொள்ள மத்திய அரசு வழங்கும் நிதியை கேரள அரசு முறையாக பயன்படுத்தவில்லை’’ என்று குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. ‘‘டெல்லி யில் சில ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் நாய்கள் இருந்தன. அவை களுக்கு ‘ஏபிசி’ அறுவை சிகிச்சை முறையாக மேற்கொண்டதன் மூலம் தற்போது டெல்லியில் நாய்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக குறைந்துவிட்டது’’ என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய பிராணிகள் நல சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.கார்ப். இந்திய ராணுவத்தில் 38 ஆண்டுகள் பணியாற்றியவர். நாய்களுக்கான படைப்பிரிவைத் தலைமையேற்ற அனுபவம் பெற்ற வர். குர்கானில் முகாமிட்டுள்ள அவரை ‘தி இந்து’-வுக்காக தொடர்பு கொண்டு பேசியபோது, ‘‘கேரளாவில் நடக்கும் சம்பவங் கள் தெரியும். அதை தடுக்க தேவை யான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். தடுப்பு ஊசி, அறுவை சிகிச்சை மூலமே இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். நாய்களை கொல்வது தீர்வல்ல. நாய்கள் கொல்லப் படுவதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்கள் மூலம் எடுப்போம்’’ என்றார்.

மனிதர்களிடம் அருகிக் கொண்டே வரும் ஒரு குணம், தாங்கள் கொல்லப்பட்டாலும்கூட நாய்களிடம் மட்டும் எப்போதும் மறையாது. அது… நன்றி!

எஜமானனை தேடி 14 ஆண்டுகள்..

இத்தாலியில் அலுவலகம் சென்ற எஜமான் ஒருநாள் வீடு திரும்பவில்லை. அவர் குண்டடிபட்டு இறந்துபோய் விட்டார் என்பதைக்கூட அறியாத அவரது நாய் பிடோ வழக்கம்போல் மாலை 6 மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்தது. எஜமானன் வராததால் ஏமாற்றம் அடைந்த நாய், வீடு திரும்பிவிட்டு மீண்டும் மறுநாள் மாலை பேருந்து நிலையம் வந்தது. அன்றும் ஏமாற்றமே மிஞ்சியது.

இப்படியே ஒருநாள் இரண்டு நாள் அல்ல, 14 ஆண்டுகள் தினமும் பேருந்து நிலையம் வந்து காத்திருந்து உயிரை விட்ட பிடோ என்ற நாய்க்கு அதே பேருந்து நிலையத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x