Published : 03 Oct 2022 11:25 PM
Last Updated : 03 Oct 2022 11:25 PM

கரூர் மனித உரிமை ஆர்வலர் படுகொலை விவகாரம் - நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை

சுயஆட்சி இந்தியா கட்சியின் தேசிய தலைவர் கிறிஸ்டினா சாமி மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளனர். படம்: நா.தங்கரத்தினம்.

மதுரை: கரூரில் கல்குவாரிக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமை காப்பாளர் ஜெகநாதன் படுகொலையில் நீதி கிடைக்க திருச்சி ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அச்சுறுத்தல் உள்ள ஜெகநாதன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மதுரையில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை சொக்கிகுளத்திலுள்ள மக்கள் கண்காணிப்பகத்தில் இன்று மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சுயஆட்சி இந்தியா கட்சியின் தேசிய தலைவர் கிறிஸ்டினா சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "கரூர் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு எதிராக போராடியவர் குப்பம் ஊராட்சி காளிபாளையத்தைச் சேர்ந்த மனித உரிமை காப்பாளர் ஜெகநாதன். இவர் இயற்கை வளம் மற்றும் விவசாயத்தை காக்கும் வகையில் பல ஆண்டாக போராடி வந்தவர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிக்கு எதிராக கரூர் ஆட்சியரிடம் புகார் மனுக்கொடுத்ததால் கடந்த செப்.10ம் தேதி வேன் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறு உடற்கூராய்வு வேண்டும் என்றதால் மனித உரிமை காப்பாளர்கள் போலீஸாரால் கடத்தப்பட்டனர். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் உயர்மட்ட கள ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி கல்குவாரிகளில் அரசின் விதியை மீறி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. 150 அடி ஆழத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு 700 அடிக்குமேல் தோண்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதோடு இயற்கைவளங்களும் அழிந்து வருகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதோடு, அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் வருவாய் ஈட்டியுள்ளனர். இதில் நடந்த முறைகேடுகளை கண்டறிய தமிழ்நாடு அரசின் முதன்மைச்செயலர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும்.

அக்குழுவில் ஐஐடியில் கனிமவளத்துறை நிபுணர்கள், அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கனிமவளத்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளத்தில் அளவை கணக்கீடு செய்து அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

மேலும், முறையாக நேர்மையான விசாரணை நடக்க திருச்சி ஐஜி சந்தோஷ்குமார் விசாரணை நடத்தி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும்" என்றார். அப்போது, ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ஹென்றி திபேன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x