Published : 03 Oct 2022 07:45 PM
Last Updated : 03 Oct 2022 07:45 PM
மதுரை: மதுரையில் இன்று மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பக்வந்த் குபா தலைமையில் அரசு பயணியர் விடுதியில் மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசின் திட்டங்கள் பயனடைந்த பயனாளிகளிடம் மத்திய அமைச்சர் கலந்தாலோசனை செய்தார். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, "மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு அரசு திட்டங்களும் எவ்வித தடையுமின்றி கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் பிரதமர் கண்ணும் கருத்துமாக உள்ளார். அவரது எண்ணப்படியே தமிழகத்தில் கடைக்கோடி மக்களுக்கும் மத்திய அரசு திட்டங்கள் சென்றடைந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களிலும் பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தி வருகிறது
மதுரையில் 4.44 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் 2024ம் ஆண்டு நிறைவடையும். அதில் தற்போது 1 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் மிக விரைவில் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் மட்டும் மத்திய அரசின் திட்டங்களில் 20 லட்சம் பேர் பயனடைகின்றனர். இந்தியா முழுவதும் யூரியா உள்பட ரசாயன உரங்களுக்கு தட்டுப்பாடுகள் இல்லை. மாநிலங்களின் தேவைக்கேற்ப உரங்கள் வழங்கப்படுகின்றன" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT