Published : 03 Oct 2022 06:15 PM
Last Updated : 03 Oct 2022 06:15 PM

பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டினால் கூண்டோடு சஸ்பெண்ட்: தி.மலை ஆட்சியர் எச்சரிக்கை

சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்களை அகற்றுவது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் பா.முருகேஷ். | படம் - இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் விழுந்து அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால், கூண்டோடு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் சுவரொட்டி மற்றும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் அதிகரித்துவிட்டது. அரசு மற்றும் தனியார் சுவர்கள், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர்கள், பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்த நிழற் குடைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடந்தும் பாதைகளை மறித்து டிஜிட்டல் பேனர்கள் கட்டப்படுகிறது. பொதுமக்கள், அரசு துறைகளைச் சேர்ந்த சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை.

இதேபோல் அரசியல் கட்சிகளும் எல்லை மீறியது. புதிய நிர்வாகிகள் நியமனத்தை விளம்பரப்படுத்தி, திமுக சார்பில் அதிகளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நிலை மாவட்டம் முழுவதும் நிலவுகிறது. சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளது.

இதன் எதிரொலியாக, சுவரொட்டிகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை அகற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (3-ம் தேதி) காலை நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, ''பேனர் வைத்தல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது மீண்டும் அதிகரித்துள்ளது. பேருந்து நிறுத்த நிழற்குடையை கூட விட்டு வைக்காமல் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். விதவிதமாக 'போஸ்' கொடுத்து திருமண பேனர்கள் வைக்கப்படுகின்றன. கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளும் அதிகளவில் உள்ளன. சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கருப்பு - வெள்ளை நிறத்தில் வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. அதிலும் சுவரொட்களை ஒட்டி உள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் ஆக்கிரமிப்புகள்: வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. டிஜிட்டல் பேனர் விழுந்து அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால், கூண்டோடு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் இடமாற்றமும் செய்யப்படுவார்கள். சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்றாத உங்களது செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு அவமானமாக உள்ளது. நடைபாதைகளை ஆக்கிரமித்து டிபன் கடை உள்ளிட்ட கடைகள் மீண்டும் அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியின் நிலை, மோசமாக இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அப்படியிருந்தும் அகற்றப்பட வேண்டும். இது குறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடமும் ஆலோசனை செய்யப்பட்டது. அவரும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுவரொட்டி, டிஜிட்டர் பேனர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்'' என்றார். கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலி: திருவண்ணாமலை கிரிவல பாதையில் குப்பைகள் குவிந்து சுகாதாரமின்றி இருப்பதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் புகைப்படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இச்செய்தியை சுட்டிக் காட்டி ஆட்சியர் பா.முருகேஷ் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், ''கிரிவல பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகள் அதிகளவில் குவியும் வரை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். கிரிவல பாதையில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x