Published : 03 Oct 2022 06:09 PM
Last Updated : 03 Oct 2022 06:09 PM
சென்னை: ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகள் டிசம்பர் 2024-க்குள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது.
இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இதன் கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையில் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும். இந்த திட்டம் 2024ம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும். காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும்" என்று அவர் கூறியுள்ளார்.
Strengthening #GatiShakti for the vision of #AatmanirbharBharat!
Working towards providing seamless multimodal connectivity in #NewIndia, the project for Chennai Port to Maduravoyal corridor in Tamil Nadu has been developed at an estimated cost of Rs. 5800 Cr. #PragatiKaHighway pic.twitter.com/byvGUf1GAy— Nitin Gadkari (@nitin_gadkari) October 3, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT