Published : 03 Oct 2022 02:56 PM
Last Updated : 03 Oct 2022 02:56 PM

திமுக அரசின் அலட்சியப்போக்கால் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு பின்னடைவு: ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப்படம்

சென்னை: "தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. ஆனால், இதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: " ‘சுத்தம் போறு போடும்’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக்குடி’ போன்ற பழமொழிகள் தூய்மையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறமும் தூய்மையாக இருந்தால்தான் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை நாம் அனைவரும் பெற முடியும். இதன் அவசியத்தை உணர்ந்துதான் தூய்மை இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. ஆனால், இதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது.

திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது உள்ளாட்சி அமைப்புகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையினை மத்திய அரசு வெளியிட்டது. இதில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இடையிலான தூய்மை நகரங்கள் போட்டியில், மொத்தம் 45 நகரங்கள் இடம் பெற்றதாகவும், இதில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமை உள்ளிட்ட அசுத்தம் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீதான சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு உள்ளாட்சி அமைப்பும் இடம்பெறவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னையில் பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்ற புகைப்படங்கள் பத்திரிகைகளில் அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக குப்பைகளை வேறு வழியின்றி தொட்டிக்கு வெளியே கொட்டும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதுதான் கள யதார்த்தம். வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்.

இதன்மூலம் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும். இதன்மூலம், மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். இது நாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல. டெண்டரில் தான் தூய்மை கடைபிடிக்கப்படுவதில்லை. தூய்மையிலாவது தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியாத வகையில் உடனுக்குடன் அதில் உள்ள குப்பைகளை எடுக்கவும், தூய்மையின்மையால் வரும் நோய்கள் குறித்தும், தூய்மையின் முக்கியத்துவம் குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தூய்மையில் சிறந்த நாடு தமிழ்த் திருநாடு என்ற சிறப்பினை தமிழ்நாடு பெறவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x