

சென்னை: காலை உணவு திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இத்திட்டம் முதல் கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை மாதம்தோறும் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்து காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் தொடர்பாக விளம்பரங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேருந்து இன்று தொடங்கி வைக்கப்பட்டது.