Published : 03 Oct 2022 01:23 PM
Last Updated : 03 Oct 2022 01:23 PM
புதுச்சேரி: உள்ளூர் மொழி, தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்தும் அரசியல் காரணங்களுக்காகத்தான் தேசியக் கல்விக்கொள்கையை எதிர்க்கிறார்கள் என்றும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
புதுச்சேரி பாஜக கட்சி தலைமை அலுவலகத்துக்கு இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முழுவீச்சில் பணிகள் செய்துள்ளோம். சமூக முன்னேற்றத்துக்கு கல்வித்தான் முக்கியம். அடுத்த தலைமுறையை உயர்த்த கல்விதான் முக்கிய பங்கு வகிக்கும். உள்ளூர்மொழி, தாய்மொழிக்கும் தேசியக் கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் தருகிறோம். புதிய கல்விக் கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும். அனைத்து விஷயங்களையும் பள்ளிக் கல்வியிலேயே அறிய முடியும். இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும்.
ஏன் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. கல்விக்கொள்கையில் ஆக்கப்பூர்வ முயற்சியை நாங்கள் தருகிறோம். உலகத்தரத்துக்கு இணையாக மேம்படுத்தி அடுத்த நூற்றாண்டில் இளையோருக்கு உரிய முக்கியத்துவத்தை இக் கல்விக் கொள்கை தரும். ஆனால், அரசியல் காரணங்களுக்காகதான் கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். ஆர்எஸ்எஸ் தனிப்பட்ட அமைப்பு, தசரா காலத்தில் ஊர்வலம் செல்வது வழக்கம். நூற்றாண்டு பாரம்பரிய இந்த அமைப்பு இந்நிகழ்வை புதுச்சேரியில் நடத்தியுள்ளது. இந்தியா ஜனநாயக நாடு. அவரவருக்கு உரிய தனிப்பட்ட பார்வைகளை வெளிப்படுத்த அனுமதியுண்டு.
புதுச்சேரியிலுள்ள அனைத்து பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். அது வரவேற்க்கத்தக்கது. கல்வி அமைச்சகம் பரிசீலித்து விரைவில் முடிவு தெரிவிப்போம்" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், மாநிலத்தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT