Published : 03 Oct 2022 12:56 PM
Last Updated : 03 Oct 2022 12:56 PM

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப் படம்

சென்னை: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழாக்களை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமழக மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும். நம் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல ஒருங்கிணைந்த உணர்வில் இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு நமது மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்: நாடு முழுவதும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பக்தி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தர வேண்டும். அனைவரும் அனைத்து வளங்களும் ,நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ எனது மனமார்ந்த ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்: நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மனத் திட்பத்தோடு துணிவையும் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும். விஜயதசமி தினத்தன்று, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் தெய்வத்தின்

திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது. அன்னை சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்த நாளான விஜயதசமி தினத்தன்று தீயவைகள் அகன்று நல்லவைகள் நடக்கட்டும்.

தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களுடைய வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள்புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x